உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தர்ணா, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடு! போலீஸ் நடவடிக்கைக்கு கட்சிகள் எதிர்ப்பு

தர்ணா, ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்த கட்டுப்பாடு! போலீஸ் நடவடிக்கைக்கு கட்சிகள் எதிர்ப்பு

கோவை: கோவை நகர் பகுதியில் அரசியல் கட்சியினர் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, போலீஸ் தரப்பில் உருவாக்கியுள்ள புதிய நெறிமுறைகளுக்கு, அனைத்து கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் வருங்காலங்களில் அரசியல் கட்சிகளின் பேரணி, பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், தெருமுனை கூட்டம் போன்றவை நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், செப். மாத இறுதியில், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. போலீஸ் தரப்பில், சில வீடியோ காட்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்காமல், கண்துடைப்புக்காக அக்கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்தியதாக, மா.கம்யூ., தரப்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. இச்சூழலில், கோவை மாநகர பகுதிக்குள் ஊர்வலங்கள், தெருமுனை கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தர்ணா உள்ளிட்ட போராட்டங்கள் நடத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு, பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்குரிய இடங்களை சுட்டிக்காட்டி, அரசியல் கட்சிகளுக்கு போலீஸ் தரப்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அனைத்துக்கட்சி கூட்டம்

இது தொடர்பாக, அனைத்துக்கட்சிகள் சார்பில் ஆலோசனை கூட்டம், காந்திபுரத்தில் உள்ள மா.கம்யூ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இ.கம்யூ., தேசிய குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை வகித்தார். போலீசாரின் இந்த உத்தரவுக்கு, அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்துவதற்கான இடத்தேர்வு வழிகாட்டுதல் அறிக்கையில், போலீசார் சுட்டிக்காட்டியுள்ள நெறிமுறைகள் பின்பற்ற முடியாதவை. ஜனநாயக உரிமைகளை மறுக்கக் கூடியதாக உள்ளது. மாநகர எல்லைகளுக்குள் ஊர்வலம் நடத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு தலைமை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்கள் நடத்தவும், தெருமுனை கூட்டங்கள் நடத்தவும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்க முடியாது. இதுசம்பந்தமாக, அனைத்து கட்சி சார்பில் போலீஸ் உயரதிகாரிகள் மட்டத்தில் பேசி தீர்வு காணப்படும். இவ்வாறு, முடிவு எடுக்கப்பட்டது. இ.கம்யூ., மாவட்ட செயலாளர் சிவசாமி, மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் கனகராஜ், காங்கிரஸ் சார்பில் விஜயகுமார், ஸ்ரீதரன், ம.தி.மு.க., உயர்நிலை குழு உறுப்பினர் மோகன்குமார், மாநகர் மாவட்ட செயலாளர் செல்வராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட் ட நிர்வாகி குமணன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி