சிங்காநல்லுாரில் மேம்பாலம் கட்ட ரூ.170 கோடிக்கு திருத்திய மதிப்பீடு
கோவை; சிங்காநல்லுார் சந்திப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு ரூ.170 கோடிக்கு திருத்திய மதிப்பீடு தயாரித்து, நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் கேட்டு, தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.கோவை - திருச்சி ரோட்டில் சிங்காநல்லுார் சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, மேம்பாலம் கட்டுவதற்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறை முடிவெடுத்தது. ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளிக்கு முன் துவங்கி, சிங்காநல்லுார் சந்திப்பை கடந்து, மேற்கு மின்வாரிய அலுவலகம் வரை, 2,400 மீட்டர் நீளத்துக்கு, 54 கண்களுடன் நான்கு வழி மேம்பாலம் கட்டுவதற்கு திட்ட அறிக்கை தயாரித்து, ஒப்புதல் பெறப்பட்டது. அச்சமயத்தில், திட்ட மதிப்பீடு ரூ.110.80 கோடியாக இருந்தது.டெண்டர் இறுதி செய்ய முடியாதது, கொரோனா தொற்று பரவிய காலம், மெட்ரோ நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டிய நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால், இப்பகுதியில் மேம்பாலம் கட்ட முடியாத சூழல் தொடர்ந்தது. கட்டுமான பொருட்கள் விலை அதிகரித்ததால், மதிப்பீடு தொகை ரூ.141 கோடியாக உயர்ந்தது.கடைசியாக நடந்த டெண்டரில் ஒரு நிறுவனம் மட்டுமே பங்கேற்றதால், ரத்து செய்யப்பட்டது.தற்போதுள்ள விலை விகிதங்களில் இரும்பு, ஜல்லி, மணல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் விலை உயர்ந்திருப்பதால், ஒப்பந்த நிறுவனத்தினர் டெண்டர் கோர தயக்கம் காட்டுவது தெரியவந்தது.அதனால், திட்ட மதிப்பீடு தொகையை, ரூ.170 கோடியாக தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் திருத்தி அமைத்திருக்கின்றனர். திருத்திய மதிப்பீட்டுக்கு ஒப்புதல் மற்றும் நிதி ஒதுக்கீடு கோரி, கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.