-நமது நிருபர்-கோவை நகரில், சிக்னல்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், போக்குவரத்து விதிமீறல் அதிகம் நடப்பதால் கேமரா கண்காணிப்பை வைத்து, தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.கோவை நகருக்குள், கடந்த 2021க்கு முன்பு வரை, 72 சிக்னல்கள் இருந்தன. பல ரோடுகளில் பாலங்கள் கட்டப்பட்டதால், சிக்னல்கள் குறைந்து, 2022 வரையிலும் 51 சிக்னல்கள் செயல்பட்டு வந்தன.கடந்த ஆண்டிலிருந்து, சிக்னல் இல்லாத புதிய முறையை, மாநகர போக்குவரத்து காவல் துறையும், மாநில நெடுஞ்சாலைத் துறையின் சாலை பாதுகாப்புப் பிரிவும் இணைந்து அறிமுகம் செய்தன.அவிநாசி ரோட்டில் மட்டும் 15 இடங்களில், 'யு டேர்ன்' அமைத்தும், மற்ற ரோடுகளில் 'ரவுண்டானா' அமைத்தும், வாகனங்கள் நிற்காமல் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய நடைமுறையால், அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, லாலி ரோடு, வடகோவை உள்ளிட்ட முக்கிய சந்திப்புகள் உட்பட, 35 சிக்னல்கள் குறைக்கப்பட்டன; தற்போதைய நிலையில், நகருக்குள் 16 சிக்னல்கள் மட்டுமே உள்ளன.இதற்கு, பொது மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. அதே நேரத்தில், சிக்னல் இல்லாத காரணத்தால், நகருக்குள் வேகக்கட்டுப்பாடு உடைக்கப்பட்டுள்ளது.அதிலும் குறிப்பாக, டூ வீலர்களில் ரேஸ் செல்வது போல் பறப்பது அதிகரித்துள்ளது. இரவு 10 மணிக்கு மேல், அவிநாசி ரோட்டிலும், சத்தி ரோட்டிலும் 140லிருந்து 160 கி.மீ., வேகத்தில் டூ வீலர்கள் 'பறந்துள்ளது' தெரியவந்துள்ளது.தற்போது சிக்னல்கள் குறைக்கப்பட்டிருந்தாலும், நகருக்குள் 2302 இடங்களில் 'சிசிடிவி' கண்காணிப்பு இருப்பதால், ஒரு நாளுக்கு எவ்வளவு வாகனங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுகின்றன என்பது, 'சாப்ட்வேர்' உதவியுடன் பதிவு செய்யப்படுகிறது.இதில், ஒரு ரோட்டில் மட்டும் ஒரே நாளில் 72 ஆயிரம் வாகனங்கள் விதிமீறலில் ஈடுபடுவதாக, அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.ஆனால் விதிமீறிய அனைவருக்கும் அபராத நோட்டீஸ் போவதில்லை; அவற்றிலும் தேர்ந்தெடுத்தே பரவலாக நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.இதன் காரணமாக, நகருக்குள் வாகனங்களின் வேகத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கை போதுமானதாக இல்லை என்று, மக்கள் வருந்துகின்றனர்.அதேபோல, சிக்னல்கள், காலை 7:00 மணிக்கு செயல்படத்துவங்கி, இரவு 10:00 மணிக்கு நிறுத்தப்படுகின்றன.கோவை நகருக்குள் காலை 6:00 மணிக்கே, வாகன போக்குவரத்து அதிகமாகி விடுகிறது. இரவுக் காட்சிக்குப் பின், ஒரு மணி வரையிலும் கூட வாகனப்போக்குவரத்து உள்ளது.அந்த நேரத்தில் சிக்னல் இயங்காத காரணத்தால், வாகனங்கள் தாறுமாறாகவும், அசுர வேகத்திலும் பறக்கின்றன. அந்த நேரத்தில் டியூஷன் செல்லும் குழந்தைகள், வெளியூர் மற்றும் பணிக்குச் செல்வோர் பதற வேண்டியுள்ளது.எனவே, காலை 6:00 மணிக்கே சிக்னலை 'ஆன்' செய்து, இரவு 1:00 மணி வரை இயக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.அதேபோன்று, அசுர வேகத்தில் டூ வீலர்கள் மற்றும் கார்களை இயக்குவதைக் கட்டுப்படுத்த, கூடுதல் கேமராக்களை நிறுவுவதுடன், விதிமீறுவோர்க்கு அபராதம் அல்லது தண்டனை வழங்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிக்னலை குறைத்த அதிகாரிகள், விபத்துகளுக்கான சிக்கல்களையும் குறைப்பது மிக முக்கியம்!