உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

மின்வெட்டை கண்டித்து சாலை மறியல்

நெகமம்: வடசித்தூர் பகுதியில் இரண்டு நாட்கள் தொடர் மின்வெட்டு ஏற்பட்டதை கண்டித்து, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வடசித்தூரில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில், கடந்த இரண்டு நாட்களாக, 1 மற்றும் 2வது வார்டு, பெருமாள் கோவில் வீதியில், நாள் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து வடசித்தூர் மக்கள் மின்வாரிய அலுவலகத்தை மொபைல்போன் வாயிலாகவும், நேரில் சென்றும் புகார் அளித்தனர். ஆனால், நேற்று இரவு வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், ஆத்திரமடைந்த மக்கள், நேற்று இரவு வடசித்தூர் நான்கு ரோடு ரவுண்டானா பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, மக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். ஆனால், மக்கள் மறியலை கைவிடாத நிலையில், மின் வாரிய அதிகாரிகள் மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதன்பின் வடசித்தூர் பகுதியில் மின் இணைப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து மக்கள் போராட்த்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ