| ADDED : ஜன 18, 2024 01:30 AM
மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம் காரமடை அருகே ரயில்வே மேம்பாலத்திற்கு கீழ் சுரங்க பாதை உள்ளது. இதில் பல மாதங்களாக தேங்கியுள்ள மழை நீரால் தற்போது சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.கோவை-மேட்டுப்பாளையம் இடையே மெமு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் மேட்டுப்பாளையம்-சென்னை இடையே நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் காரமடை வழியாக செல்லும் போது ரயில்வே கேட் போடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.இதையடுத்து காரமடை ரயில்வே மேம்பாலம் கட்டப்பட்டது. மேம்பாலத்திற்கு கீழ் இருசக்கர வாகனங்கள், மேம்பாலத்திற்கு அருகே உள்ள தெருக்களில் வசித்து வரும் மக்கள் நடந்து செல்ல சுரங்க பாதை அமைக்கப்பட்டது. மக்கள் பயன்பாட்டில் இருந்த சுரங்க பாதை தற்போது ஒர் ஆண்டுக்கும் மேலாக மழை நீர் சூழ்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்துக்கு தண்ணீர் உள்ளது. தேங்கியுள்ள நீர் பாசி படிந்து, பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் சூழ்ந்து சுகாதார சீர்கெட்டின் உச்சத்தில் உள்ளது. மழைநீர் என்பதால் டெங்கு கொசுக்கள் உற்பத்திக்கும் வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், துர்நாற்றம் வீசுகிறது. நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. தேங்கியுள்ள நீரில் யாராவது விழுந்தால் மூழ்கி இறக்கவும் வாய்ப்புள்ளது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ''சுரங்க பாதையில் வரும் துர்நாற்றம் தாங்க முடியவில்லை. கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளன. மக்கள் நடமாட்டம் இல்லாததால், சமூக விரோதிகளின் நடமாட்டம் சுரங்க பாதை அருகே உள்ளது. மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால் காரமடை பஸ் நிலையம், அரங்கநாதர் கோவிலுக்கு செல்ல வசதியாக இருக்கும்,'' என்றனர்.இதுகுறித்து காரமடை நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், சுரங்க பாதையில் உள்ள நீரை மோட்டார் வாயிலாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வரப்படும், என்றார்.காரமடை நகராட்சி கூட்டத்தில் இதுகுறித்து பல முறை கவுன்சிலர்கள் பேசியும், நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.----