உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வணிக கட்டடங்களில் பார்க்கிங் ஏரியாவில் கடை அப்பட்டமாக விதிமீறல்; துாங்குகிறதா நகரமைப்பு துறை

வணிக கட்டடங்களில் பார்க்கிங் ஏரியாவில் கடை அப்பட்டமாக விதிமீறல்; துாங்குகிறதா நகரமைப்பு துறை

கோவை; கோவை மாநகரின் உயிர் நாடியாக விளங்கும் இடங்களில், வணிக கட்டடங்களில் 'பார்க்கிங்' இடம் ஒதுக்காமல், கடைகளுக்காக இடத்தை ஆக்கிரமிப்பதால், வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன.தமிழகத்தில், 2019ம் ஆண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. அதன்படி, அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்று வணிக கட்டடங்கள் அமைக்க வேண்டும். கட்டட நிறைவு சான்று இருந்தால் மட்டுமே குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற முடியும்.இதனால், அனுமதியற்ற கட்டடங்கள் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், விதிமீறல் என்பது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக, வரைபடங்களில் 'பார்க்கிங்' ஆக காட்டப்பட்ட இடங்களில், கடைகளை அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர். இதனால், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் ரோட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.பக்கவாட்டில் மக்கள் நடந்துசெல்லவும், வாகனங்கள் நிறுத்தவும் இடம் விட்டு ரோடு அமைக்கப்படுகிறது. விதிமீறல் காரணமாக பாதசாரிகள் நடைபாதைக்கு பதிலாக ரோட்டில் நடந்து சென்று விபத்துக்கு ஆளாகும் கொடுமை நடக்கிறது.மக்கள் போக்குவரத்துமிக்க ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, 100 அடி ரோடு உள்ளிட்ட இடங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களில் கயிறு கட்டியும், இரும்பு சங்கிலி கொண்டு தடுப்பு ஏற்படுத்தியும் ஆக்கிரமிக்கின்றனர்.அப்பட்டமாகவே நடக்கும் விதிமீறல்களை நகரமைப்பு பிரிவினர் கண்டுகொள்ளாதது பல விதங்களில் சந்தேகத்தை கிளப்புகிறது. டவுன்ஹாலில் உள்ள பிரதான மாநகராட்சி அலுவலகம் எதிரேயே கடைகளால் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதை காண முடிகிறது.'பார்க்கிங்'கே இல்லாமல் நிறைய வணிக கட்டடங்கள் இயங்கி வரும் நிலையில், ஒதுக்கப்பட்ட இடத்தை மீட்பது மாநகராட்சி பொறுப்பு. விதிமீறல் கட்டடங்களில் வசூலிக்கப்படும் அபராதத்தால் மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். இதுபோன்ற விதிமீறல்களை ஒழுங்குபடுத்தினால், கோவைக்கு மதிப்பும் கூடும் என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'ஆய்வுக்கு சென்றால், அரசியல் புள்ளிகளின் பின்புலத்தால் விதிமீறல் கடை உரிமையாளர்கள் தற்காத்துக்கொள்கின்றனர். இங்குள்ள பல கடைகள் பொதுமக்கள் நன்மைக்காக இல்லாமல், விதிமீறி செயல்படுகின்றன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை