மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு
16-Nov-2024
வால்பாறை; வால்பாறை அரசு மருத்துவமனையில், டாக்டர் பற்றாக்குறையால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வால்பாறை நகரின் மத்தியில், அரசு மருத்துவமனை செயல்படுகிறது. அரசு மருத்துவமனையில், 12 டாக்டர்கள் பணிபுரிய வேண்டிய இடத்தில், நான்கு டாக்டர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.இதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தவிர, செவிலியர், சமையலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: வால்பாறை அரசு மருத்துவமனை, 9 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பில்டிங் மட்டும் தான் பெரியதாக உள்ளது, போதிய அளவு டாக்டர்கள், டெக்னீசியன்கள் இல்லை.இதனால், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட வசதிகளை மக்கள் பயன்படுத்த முடிவதில்லை. குறைவான டாக்டர்கள் பணியில் உள்ளதால், நோயாளிகள் பல மணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது.குறிப்பாக, விபத்து சிகிச்சையின் போது, போதிய டாக்டர் இல்லாததால், பாதிக்கப்பட்டவர்களை பொள்ளாச்சி, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இதனால், செல்லும் வழியிலேயே நோயாளிகள் இறந்து விடும் சூழ்நிலையும் உள்ளது. எனவே, வால்பாறையில் வசிக்கும் மக்களின் நலன் கருதி, அரசு மருத்துவமனையில் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.இவ்வாறு, கூறினர்.சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரிடம் கேட்ட போது, ''வால்பாறை அரசு மருத்துவமனையில் குறைவான டாக்டர்கள் இருந்தாலும், மக்களுக்கு நிறைவான மருத்துவ சேவை வழங்குகின்றனர். டாக்டர் பற்றாக்குறையை சமாளிக்க, கூடுதலாக இரு டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓரிரு நாளில் வால்பாறை அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்து விடுவார்கள். பிற பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்,'' என்றார்.
16-Nov-2024