சிறுவாணி நீர்மட்டம் 30.24 அடியாக உயர்வு; மூன்று வால்வுகள் தண்ணீருக்குள் மூழ்கின
கோவை : சிறுவாணி அணை பகுதியில், மழைப்பொழிவு தொடர்வதால், 30.24 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது. நீர் புகு கிணற்றில் உள்ள நான்கு வால்வுகளில் மூன்று, தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், பாலக்காடு கணவாய் மற்றும் கேரள வனப்பகுதி, கோவை மேற்கு பகுதிகளில், 24ம் தேதியில் இருந்து மழை காணப்படுகிறது. கோவை குற்றாலத்துக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கிறது. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி, அடிவாரத்தை நோக்கி, தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதனால், நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்மட்டம் அதிகரிக்கும்
சிறுவாணி அணைப்பகுதியில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அணையில், குடிநீர் எடுக்கப்படும் நீர்புகு கிணற்றில், நான்கு வால்வுகள் இருக்கின்றன. 30 அடிக்கு நீர் இருப்பு இருப்பதால், மூன்று வால்வுகள் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளன.வரும், 30ம் தேதி வரை கன மழை தொடருமென, வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறுவதால், நீர் மட்டம் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவ மழை காலம் செப்., வரை இருப்பதால், கேரள அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு, 45 அடிக்கு நீரை தேக்குவதற்கு வாய்ப்புள்ளது.அதேநேரம், அணையில் ஏற்படும் நீர்க்கசிவை சரி செய்ய, புனேவில் உள்ள தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய விஞ்ஞானிகள் கடந்த ஜன., மாதம் ஆய்வு செய்து, இரு விதமான நடைமுறைகளை முன்மொழிந்தனர்.அப்பணிகளை செய்வதற்கு மதிப்பீடு தயாரித்துக் கொடுக்க, கேரள நீர்ப்பாசனத்துறைக்கு கோவை மாநகராட்சி கடிதம் எழுதியது. மதிப்பீடு கொடுக்காததால், நீர்க்கசிவு இன்னும் தடுக்கப்படவில்லை. அதனால், இவ்வாண்டும், 45 அடிக்கே நீர்த்தேக்குவதற்கு வாய்ப்புள்ளது. 'கேரளாவுக்கு கடிதம்'
இதுகுறித்து, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்ட போது, ''சிறுவாணியில் நீர்க்கசிவு தடுக்க மதிப்பீடு கேட்டு, கேரளாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். மதிப்பீடு தயாரித்துக் கொடுத்தால், அதற்குரிய தொகையை வழங்கி விடுவோம். ''30.24 அடிக்கு நீர் இருப்பு இருக்கிறது. நீர் மட்டம் அதிகமாகும்போது, நீர்க்கசிவு ஏற்படும். அணையில், 527.95 எம்.சி.எப்.டி., அளவுக்கு தண்ணீர் தேக்கலாம். தற்போது, 297 எம்.சி.எப்.டி.,க்கு தண்ணீர் இருப்பு இருக்கிறது. அணை நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.
மழை எவ்வளவு
கோவை மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழை அளவு: பீளமேடு விமான நிலையம் - 10.60 மி.மீ., வேளாண் பல்கலை - 7.70, பெரியநாயக்கன்பாளையம் - 3, மேட்டுப்பாளையம் - 8, பில்லுார் - 7, அன்னுார் - 5.20, கோவை தெற்கு - 19.70, சூலுார் - 10, வாரப்பட்டி - 23, தொண்டாமுத்துார் - 19.80, மதுக்கரை - 16, போத்தனுார் - 12.40, பொள்ளாச்சி - 28.40, மாக்கினாம்பட்டி - 44.60, கிணத்துக்கடவு - 26, ஆனைமலை - 39, ஆழியார் - 28.40, சின்கோனா - 70, சின்னக்கல்லார் - 116, வால்பாறை - 58, சோலையாறு - 61 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.