நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்ய மின்வாரியத்துக்கு சிஸ்பா வலியுறுத்தல்
கோவை; மேற்கூரை சோலார் மீதான நெட்வொர்க் கட்டண ரத்து என்ற கோர்ட் உத்தரவை, அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் என, சிஸ்பா வலியுறுத்தியுள்ளது.மேற்கூரை சோலார் மீதான நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் தலைமை நிதிக் கட்டுப்பாட்டாளர் சதீஷ்குமார், அனைத்து மேற்பார்வை பொறியாளர்கள், மின் பகிர்மான வட்டங்களுக்கு இதுதொடர்பான சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டுள்ள அவர், மேற்கூரை சோலார் நுகர்வோருக்கான பில், நெட்வொர் கட்டணத்தை சேர்த்து கணக்கிடப்பட வேண்டும்.அதேசமயம், ஏதேனும் நுகர்வோர், உயர் நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு நெட்வொர்க் கட்டணம் விதிக்கக்கூடாது என, வாதிட்டால், அதனைப் பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். மின்பகிர்மானக் கழகம் மேல்முறையீடு செய்வது, தொடர்பாக ஆலோசித்து வருவதால், இதுவரை வசூலித்த நெட்வொர்க் கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பது தொடர்பான, உத்தரவு பிறகு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வழக்குத் தொடுத்த மனுதாரர்கள் மற்றும் சிஸ்பா உறுப்பினர்களுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் மேற்கூரை சோலாருக்கான நெட்வொர்க் கட்டணம் ரத்து செய்யப்பட வேண்டும் என, சிஸ்பா வலியுறுத்தியுள்ளது.
'சட்டம் பொதுவானது'
சிஸ்பா செயலாளர் பிரதீப் கூறுகையில், “சட்டம் அனைவருக்கும் பொதுவானது. வழக்குத் தொடுத்தவர்கள் மட்டுமல்லாது, மேற்கூரை சோலார் மின் நுகர்வோர் அனைவருக்கும் நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். கோர்ட் உத்தரவை தனிப்பட்ட உத்தரவாகக் கருதாமல், பொது உத்தரவாகக் கருத வேண்டும். மின் வாரியம் நெட்வொர்க் கட்டணம் வசூலிக்கக் கூடாது,” என்றார்.