வாசலில் பாம்பு; புதரில் சிறுத்தை; அச்சத்தில் மக்கள்! அதிகாரிகள் கண்ணில் படாத கலைஞர் நகர்!
வால்பாறை : வால்பாறை கலைஞர் நகரில் அடிப்படை வசதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படாத நிலையில், பகல் நேரத்தில் வீட்டு வாசலில் பாம்புகள் ஊர்வதாலும், இரவில் புதரில் சிறுத்தை பதுங்குவதாலும், மக்கள் அச்சத்தில் உள்ளனர்.வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது கலைஞர்நகர். இங்கு, 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தப்பகுதியில் மக்களின் தேவைக்காக நகராட்சி சார்பில் எவ்வித அடிப்படை வசதியும் செய்துதரப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்கள் நாள் தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மக்களிடம் வரி வசூலில் தீவிரம் காட்டும் நகராட்சி நிர்வாகம், அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர தயக்கம் காட்டி வருகிறது.புதர் சூழ்ந்த நிலையில் காணப்படும் கலைஞர் நகரில் பகல் நேரத்தில் பாம்புகளும், இரவு நேரத்தில் சிறுத்தையும் வீட்டு வாசலில் ஓய்வெடுக்கிறது. இதனால் இப்பகுதியில் அச்சத்துடன் வாழ்கின்றனர்.மக்கள் பிரச்னைகளை பல முறை நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும், எந்த அதிகாரியும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. இது, மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரி வசூலிச்சா போதுமா?
அப்பகுதியை சேர்ந்த மதுக்கனி கூறியதாவது:கலைஞர் நகரில் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த நடைபாதையும் சேதமடைந்துள்ளது. துாய்மை பணியாளர்கள் யாரும் இந்தப்பகுதிக்கு வருவதில்லை. இதனால் பல இடங்களில் குப்பை தேங்கிக்கிடக்கிறது. சாக்கடை கால்வாய் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், கொசுத்தொல்லையும் அதிகரித்து காணப்படுகிறது.கலைஞர் நகர் குடியிருப்பு பகுதியை சுற்றியுள்ள புதர்கள் அகற்றப்படாமல் இருப்பதால், மாலை நேரத்தில் சிறுத்தைக்கு பயந்து குழந்தைகள் வெளியில் விளையாட முடியாமல் தவிக்கின்றனர். வரி வசூலிப்பதில் தீவிரம் காட்டும் நகராட்சி அதிகாரிகள், மக்களின் அடிப்படை தேவைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும்.இவ்வாறு, கூறினார். ஓட்டு மட்டும் வேணும்!
சரவணன் கூறுகையில், ''வால்பாறை நகர் பகுதியிலிருந்து வெளியேறும் கழிவு நீர், சாக்கடை கால்வாய் வழியாக வந்து, வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. திறந்த வெளிக்கால்வாயினை சீரமைக்க கோரி பல முறை புகார் கொடுத்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை. நடைபாதைகள் இடிந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.இதேபோல், கலைஞர் நகரில் வீட்டின் முன் இடியும் நிலையில் உள்ள தடுப்புச்சுவரை கட்டித்தரக்கோரி, புகார் தெரிவித்தும் நகாரட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை. ஓட்டு கேட்க மட்டும் அக்கறையா வரும் மக்கள் பிரதிநிதிகள், வார்டில் வளர்ச்சிப்பணிகள் செய்வதில் அக்கறை காட்டுவதில்லை,'' என்றார். விரைவில் டெண்டர்!
நகராட்சி கவுன்சிலர் காமாட்சியிடம் கேட்டபோது, ''கலைஞர் நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் படிப்படியாக செய்துதரப்படும். சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யவும், புதர்களை அகற்றவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் தடுப்புச்சுவர், நடைபாதை கட்டுவதற்கான டெண்டர் விரைவில் விடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.