உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை நகருக்கு தெற்கிலும், கிழக்கிலும்... வேற லெவல் வளர்ச்சி! அதிகரிக்கும் ஐ.டி., தொழில் நிறுவனங்கள்!

கோவை நகருக்கு தெற்கிலும், கிழக்கிலும்... வேற லெவல் வளர்ச்சி! அதிகரிக்கும் ஐ.டி., தொழில் நிறுவனங்கள்!

-நமது நிருபர்-கோவை நகருக்கு வெளியே தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில், ஏராளமான புதிய நிறுவனங்கள் உருவாகி வருவதால், அசுர வேகத்தில் அப்பகுதி வளர்ச்சியடைந்து வருகிறது. புதிய நிறுவனங்களில் பல லட்சம் இளைஞர்களுக்கு, வேலை வாய்ப்பும் கிடைக்கவுள்ளது.கோவை நகரில் அமைந்துள்ள அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, சத்தி ரோடு, தடாகம் ரோடு மற்றும் மருதமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு ரோடுகள், புறநகரப் பகுதிகளையும், பல்வேறு ஊர்களையும் கோவை நகருடன் இணைக்கின்றன. இவற்றில், தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் திருச்சி ரோடு மற்றும் சத்தி ரோடு ஆகியவை குறுகலாக உள்ளன. அதிலும் சத்தி ரோடு மிகக் குறுகலாக இருப்பதால், அந்த ரோட்டில் நகரைக் கடந்து செல்வது பெரும் சிரமமாக மாறியுள்ளது.

கால் பதிக்கும் நிறுவனங்கள்

இதனால் நகருக்கு வெளியே, போக்குவரத்துக்கு எளிதாகவுள்ள அகலமான ரோடுகள் உள்ள பகுதிகளில், புதிய நிறுவனங்கள் கால் பதிக்கத் துவங்கியுள்ளன. குறிப்பாக, நீலம்பூர் பகுதியைக் கடந்த அவிநாசி ரோடு, 'எல் அண்ட் டி' பை பாஸ், மலுமிச்சம்பட்டி - பல்லடம் ரோடு ஆகிய பகுதிகள் மற்றும் அதையொட்டியுள்ள, சுற்றுவட்டாரப் பகுதிகளில், எக்கச்சக்கமான நிறுவனங்கள் முளைத்து வருகின்றன. அந்தப் பகுதிகளில், புதிய சிறப்புப் பொருளாதார மண்டல அந்தஸ்து பெற்ற ஐ.டி., நிறுவனங்களும், புதிதாக உருவாக்கப்படுகின்றன.மலுமிச்சம்பட்டி கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில், 'எல் அண்ட் டி' நிறுவனம் சார்பில், பெரிய அளவில் ஐ.டி.,நிறுவனம் துவக்கப்படவுள்ளது. அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான 270 ஏக்கர் பரப்பளவிலான வளாகத்தில், இதற்காக 15 லட்சம் சதுர அடி பரப்பில், பிரமாண்டமான மூன்று 'டவர்'கள் கொண்ட கட்டடம் கட்டப்படவுள்ளது.

30 ஆயிரம் பேருக்கு வேலை

ஊராட்சிக்கு இதற்குரிய கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணமாக ரூ.15 கோடி, அந்த நிறுவனம் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில், 30 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, நீலம்பூர் பகுதியில் கே.பி.ஆர்.,நிறுவனம் சார்பில், 2 லட்சம் சதுர அடி பரப்பில், ஐ.டி., பார்க் அமைக்கப்படுகிறது. கள்ளப்பாளையம் பகுதியில், ஏழு ஏக்கர் பரப்பில் பிரபல டைட்டன் வாட்ச் நிறுவனம், ஒரு தொழிற்கூடத்தை அமைக்கிறது. செட்டிபாளையம் பகுதியில், கொடிசியா அமைப்பின் சார்பில், 50 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டு, பல நிறுவனங்கள் துவக்கப்பட்டுள்ளன. அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களின் 'வேர் ஹவுஸ்' அதே பகுதியில் இயங்கத் துவங்கியுள்ளன. இவ்வாறு, கோவை நகர் தெற்கேயும், கிழக்கேயும் அபரிமிதமான வளர்ச்சியை எட்டி வரும் நிலையில், மற்ற பகுதிகளின் வளர்ச்சி தேக்கமடைந்துள்ளது. கோவை - கரூர் பை பாஸ், கோவை-சத்தி ரோடு பசுமை வழிச்சாலை, மேற்கு புறவழிச்சாலை, கிழக்கு புறவழிச்சாலை ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, கோவை நகரின் வளர்ச்சி பரவலாகவும், சீராகவும் இருக்கும். அதற்கான நடவடிக்கைகளை, மத்திய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொள்ள வேண்டுமென்பதே, இங்குள்ள தொழில் மற்றும் சமூக அமைப்புகளின் ஒருமித்த எதிர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ