- நிருபர் குழு -:பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் தொகுதியிலுள்ள ஓட்டுச்சாவடிகளில், இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு பின், சட்டசபை தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு முன், உடுமலை தொகுதியில், 2 லட்சத்து 72 ஆயிரத்து 14 வாக்காளர் இருந்த நிலையில், 24,855 ஆண்; 26,836 பெண்; திருநங்கை 9 பேர் என, 51 ஆயிரத்து 700 பேர் (19.1 சதவீதம்) நீக்கப்பட்டிருந்தனர். கடந்த, 19ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு பட்டியலில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 368 ஆண்; 1 லட்சத்து 14 ஆயிரத்து 926 பெண்; திருநங்கை 23 என, மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரத்து 317 பேர் இடம் பெற்றுள்ளனர். அதே போல், மடத்துக்குளத்தில், 2 லட்சத்து 43 ஆயிரத்து 478 வாக்காளர் இருந்த நிலையில், 18,487 ஆண்; 18,113 பெண் என, 36 ஆயிரத்து 600 பேர் (15 சதவீதம்) நீக்கப்பட்டிருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில், 99 ஆயிரத்து 772 ஆண்; 1 லட்சத்து 7,088 பெண்; திருநங்கை 18 என, மொத்தம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 878 பேர் இடம் பெற்றுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தேர்தல் கமிஷன், சிறப்பு முகாம்கள் நடத்த அறிவுறுத்தியுள்ளது. அதன் அடிப்படையில், இன்றும், நாளையும் மற்றும் ஜன.,3 மற்றும் 4ம் தேதி, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. இம்முகாம்களில் வரைவு வாக்காளர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதை உறுதி செய்யவும், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் விண்ணப்பித்தல், நீக்கம், திருத்தம், புதிதாக வண்ண வாக்காளர் அடையாள அட்டை கோரி விண்ணப்பம், மாற்றுத்திறனாளி என குறிப்பதற்கான விண்ணப்பம் ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம், என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். பொள்ளாச்சி பொள்ளாச்சி சட்டசபை தொகுதியில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.இதை தொடர்ந்து, பட்டியல் குறித்து ஏற்புரைகள், மறுப்புரைகள் வழங்க கடந்த, 19ம் தேதி முதல், ஜன. 18ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இன்றும், நாளையும், அதன்பின், ஜன. 3 மற்றும், 4ம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நகராட்சி வாயிலாக அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. அதில், படிவம், 6, படிவம், 7, படிவம், 8 குறித்து தகவல்களுடன் பிளக்ஸ் வைக்கப்பட்டு, முகாமினை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.