வேகம் பிடித்தது! இதுவரை 315 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை, கோட்டூர் பகுதியில் நெல் கொள்முதல் மையத்தில் இதுவரை, 315 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.ஆனைமலை அருகே ஆழியாறு அணை வாயிலாக, புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகள் பாசனம் பெறுகின்றன. பழைய ஆயக்கட்டு பாசனத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.இரு பருவங்களாக நெல் சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்தாண்டு பருவமழை கை கொடுத்ததால், இரு பருவத்திலும் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.கடந்த நவ., மாதம் சாகுபடி செய்யப்பட்ட நெல், தற்போது அறுவடைக்கு தயாராகி வருகின்றன. அதில், பழைய ஆயக்கட்டு கால்வாய் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் துவங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஆனைமலை, கோட்டூர் பகுதியில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.சன்னரகம் ஒரு குவிண்டாலுக்கு, (100 கிலோ) மொத்தம், 2,450 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொது ரகம் ஒரு குவிண்டால், 2,405 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.காலை, 9:30 மணி முதல், மதியம், 1:30 மணி வரையும், மதியம், 2:30 மணி முதல் மாலை, 6:30 மணி வரையும் கொள்முதல் செய்யப்படுகிறது.17 சதவீதம் ஈரப்பதம் இருக்க வேண்டும். விவசாயிகள் நெல்லை கொள்முதல் மையத்துக்கு கொண்டு வந்து பயன்பெற்றுக்கொள்ளலாம் என, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.கடந்த, 3ம் தேதி துவங்கிய நெல் கொள்முதல் மையங்களில், விவசாயிகள் ஆர்வமாக நெல்லை கொண்டு வருகின்றனர்.அதிகாரிகள் கூறுகையில், 'ஆனைமலையில் இதுவரை, 210 மெட்ரிக் டன், கோட்டூரில், 105 மெட்ரிக் டன் என மொத்தம், 315 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கோட்டூரில், அறுவடை தாமதமாகியதால் கொள்முதல் குறைந்தளவு இருந்தது. தற்போது அறுவடை தீவிரமாகியுள்ளதால் கொள்முதல் விறுவிறுப்பாக நடக்கிறது,' என்றனர். மகசூல் பாதிப்பு
தமிழ்நாடு விவசாய சங்கத்தின் தலைவர் மணிகண்டன், விவசாயிகள் கூறியதாவது:ஆண்டுதோறும் மே மாதம் முதல் போகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால், பருவம் தவறி தண்ணீர் திறப்பதால் மகசூல் பாதிப்பு ஏற்படுகிறது.முதல் போகம் முடிந்தததும், நிலம் தயார்படுத்த சணப்பை, உளுந்து போன்றவை சாகுபடி செய்து மண்ணுக்கு உயிர் கொடுக்கப்படும். அதன்பின்னர் நிலம் உழுது தயார்படுத்தப்படும். ஆனால், பருவத்துக்கு தண்ணீர் வழங்குவது தாமதமாகிறது.வெப்பம், புகைஞ்சான் தாக்குதலால் மகசூல் நடப்பாண்டு பாதியாக குறைந்துள்ளது. மேலும், செலவு செய்ததற்கு குறைவாக விலை கிடைப்பதால் பாதிப்பு ஏற்படுகிறது. அதிகாரிகள், நெல் விலை உயர்த்தி வழங்க அரசுக்கு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.