உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நெடுஞ்சாலைகளில் எத்தனை வாகனங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு

நெடுஞ்சாலைகளில் எத்தனை வாகனங்கள் மாநில நெடுஞ்சாலைத்துறை கணக்கெடுப்பு

தொண்டாமுத்தூர் : கோவை மாவட்டத்தில் உள்ள, முக்கிய மாநில நெடுஞ்சாலைகளில் எத்தனை வாகனங்கள் செல்கிறது என்பது குறித்து, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டத்தில், பெரும்பாலான முக்கிய சாலைகள் மாநில நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநில நெடுஞ்சாலைத்துறையினர், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும், சாலைகளை புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கம் செய்யும் பணிகளை, மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளில், தினசரி எவ்வளவு வாகனங்கள் செல்கின்றது என்பது குறித்து, கணக்கெடுக்கும் பணியில், மாநில நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மருதமலை மெயின் ரோடு, சிறுவாணி மெயின் ரோடு, தடாகம் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஒவ்வொரு சாலைகளையும் புதுப்பித்து வருகிறோம். இந்நிலையில், எதிர்கால பயன்பாட்டிற்காக, ஒவ்வொரு சாலையிலும் எத்தனை வாகனங்கள் செல்கின்றன என்பது குறித்து கணக்கெடுத்து வருகிறோம். இந்த கணக்கெடுப்பு கடந்த 19ம் தேதி முதல் துவங்கி, 25ம் தேதி வரை நடக்க உள்ளது. இந்த கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களை, மென்பொருளில் பதிவற்றம் செய்ய உள்ளோம். இதன் மூலம், அந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்ட சாலையில், புனரமைப்பு அல்லது சாலை விரிவாக்க பணி எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும். அந்த சாலையில் எத்தனை வாகனங்கள் தினசரி செல்கின்றது என்பது கணிக்கப்பட்டு, அதற்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்படும். இப்போது எடுக்கப்படும் கணக்கெடுப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில் மட்டுமே பயன்படுத்தப்படும். ஓராண்டுக்குப்பின், பணிகள் மேற்கொள்ளும்போது, இந்த கணக்கெடுப்பு விவரங்களுடன், 5 முதல் 7 சதவீதம் சேர்த்து, கணக்கீடு செய்து கொள்வோம். அதன் மூலம், அப்போது அந்த சாலையில் செல்லும் வாகனங்களின் விபரங்கள், துல்லியமாக கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !