அருவியில் சீரான நீர் வரத்து: சுற்றுலா பயணியர் உற்சாகம்; வால்பாறையில் குளுகுளு சீதோஷ்ணம்
பஞ்சலிங்கம் அருவியில் சீரான நீர் வரத்து இருந்ததால், சுற்றுலா பயணியர் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். வால்பாறையிலும் அவர்களின் வருகை அதிகரித்துள்ளது.உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பஞ்சலிங்கம் அருவி அமைந்துள்ளது. ஆண்டுமுழுவதும் சுற்றுலா பயணியர் விரும்பி வந்து குளிக்கும் பகுதியாக அருவி உள்ளது.பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை துவங்கியுள்ளதால், திருமூர்த்திமலை உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. நேற்று பஞ்சலிங்கம் அருவியில் சீரான நீர் வரத்து இருந்தது.இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலா பயணியர் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர். அமணலிங்கேஸ்வரரர் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வால்பாறை
வால்பாறையில் பருவமழைக்கு பின், இடையிடையே சாரல்மழை பெய்து வரும் நிலையில், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் குளு குளு சீசன் நிலவுகிறது.தமிழகத்தில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதால், வால்பாறையின் இயற்கை அழகை கண்டு ரசிக்க, ஆயிரக்கணக்கான சுற்றுலாபயணியர் வந்த வண்ணம் உள்ளனர்.அவர்கள் சக்தி - தலனார் செல்லும் ரோட்டில் உள்ள வியூ பாயிண்ட், சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, நல்லமுடி காட்சி முனை, சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, சோலையாறு அணை, அட்டகட்டி ஆர்கிட்டோரியம் உள்ளிட்ட சுற்றுலாஸ்தலங்களை, கண்டு ரசித்தனர்.வால்பாறையை சுற்றிபார்க்க இருசக்கர வாகனங்களில் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.வனத்துறையினர் கூறியதாவது: வால்பாறையை சுற்றிப்பார்க்க வந்துள்ள சுற்றுலாபயணியர், ரோட்டில் நடமாடும் வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. குறிப்பாக சிங்கவால் குரங்குகளுக்கு உணவு வழங்கக்கூடாது.எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில், உலா வரும் யானைகளின் அருகில் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ கூடாது. ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட எந்தப்பகுதியிலும் டிரோன் கேமரா வாயிலாக படம் பிடிக்கக்கூடாது. மீறினால் வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர். - - நிருபர் குழு -