துணிப்பை பயன்படுத்த மாணவர்கள் விழிப்புணர்வு
பொள்ளாச்சி,; கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள், பொள்ளாச்சி உழவர் சந்தையில் உள்ள விவசாயிகளுக்கு துணிப்பைகளை வழங்கினர்.கிணத்துக்கடவு பகுதியில், கோவை வேளாண் பல்கலைக்கழக தோட்டக்கலை மாணவர்கள் கிராம தங்கல் திட்டத்தில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் விவசாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகின்றனர்.இதில், பொள்ளாச்சி சேவாலயம் அமைப்பு மற்றும் ஸ்ரீ ராம ஜெயம் அறக்கட்டளையுடன் வேளாண் கல்லூரி மாணவர்கள் இணைந்து, பொள்ளாச்சி உழவர் சந்தையில், விவசாயிகளிடம் பிளாஸ்டிக் பயன்பாடால் ஏற்படும் தீமைகளை மற்றும் பாதிப்புகளை விளக்கினர். தொடர்ந்து துணிப்பைகளை உபயோகிக்க வேண்டும் என தெரிவித்தனர். அதன்பின், தெப்பக்குளத்தை தூய்மைப்படுத்தினர்.பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் கவர்களை பயன்படுத்தி, கழிவுகளாக குப்பையில் வீசும் போது, மண்ணின் மேற்பரப்பில் பரவுகிறது. மழை காலத்தில், இந்த மக்காத பாலித்தீன் படலம், மழைநீர் மண்ணுக்குள் செல்லாமல் தடுக்கிறது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது, என, தெரிவிக்கப்பட்டது.