மானிய விலையில் மண்புழு தயாரிப்பு உர படுக்கை
உடுமலை: உடுமலை வட்டாரத்திலுள்ள விவசாயிகளுக்கு, மானிய விலையில் மண் புழு உற்பத்தி உரப்படுக்கை, மானிய விலையில் வேளாண் துறை சார்பில் வழங்கப்படுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையிலும், விவசாய நிலங்களில் மண்புழு உற்பத்தியை அதிகரித்து, மண் வளம் பெருக்கி, மகசூல் அதிகரிக்கும் வகையில், விவசாயிகளுக்கு மண்புழு உற்பத்தி செய்வதற்காக, உடுமலை வட்டாரம் வேளாண் துறை வாயிலாக, மண்புழு உரம் தயாரிப்பு படுக்கை மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆர்வம் உள்ள விவசாயிகள், சிட்டா, ஆதார், வங்கிக்கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன், வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், சாளையூர், குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், உடுமலை பகுதிகளில் பருவ மழை துவங்கியுள்ள நிலையில், விவசாயிகளுக்கு சான்று பெற்ற மக்காச்சோளம் மற்றும் உளுந்து விதைகள் மற்றும் இடு பொருட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதனையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.