உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை மழையால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

கோடை மழையால் தேயிலை உற்பத்தி அதிகரிப்பு

வால்பாறை, ; கோடை மழையால், வறட்சியால் பாதித்திருந்த தேயிலை செடிகள் துளிர்விட்டுள்ளதால், தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.வால்பாறையில், 50க்கும் மேற்பட்ட எஸ்டேட்களில் மொத்தம், 32,825 ஏக்கரில் தேயிலை, காபி, ஏலம், மிளகு போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இதில், தேயிலை மட்டும், 25,253 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது.இங்கு உற்பத்தியாகும் தேயிலை துாள், குன்னுார், கோவை, கொச்சி போன்ற ஏல மையங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.கடந்த ஆண்டு பெய்த பருவமழைக்கு பின், கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை கடும் பனிப்பொழிவு நிலவியதால் தேயிலை செடிகள் கருகின. மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்தால் தேயிலை உற்பத்தி குறைந்ததோடு, தற்காலிக தொழிலாளர்களும் வேலையிழந்தனர்.இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வால்பாறையில் கோடை மழை பரவலாக பெய்கிறது. இதனால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு, உற்பத்தி அதிகரித்துள்ளது. தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கிடைத்துள்ளது.தோட்ட அதிகாரிகள் கூறியதாவது:வால்பாறையில் இந்த ஆண்டு கோடை மழை கை கொடுத்ததால், தேயிலை செடிகள் மீண்டும் துளிர்விட்டு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சீசன் துவங்கியுள்ள நிலையில் தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு, 50 கிலோ முதல், 100 கிலோ வரை தேயிலை பறிக்கின்றனர்.தொடர்ந்து, மே மாதம் வரை தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஜூன் மாதம் தென்மேற்குப்பருவ மழை துவங்கினால், உற்பத்தி குறையும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ