வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் பலி; வெளிநாட்டில் மருத்துவம் படித்த டாக்டரிடம் விசாரணை
கோவை : வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்ற வாலிபர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார், வெளிநாட்டில் மருத்துவம் முடித்த டாக்டரிடம் விசாரிக்கின்றனர்.கோவை சூலுாரை அடுத்த செஞ்சேரிமலை பகுதியை சேர்ந்தவர் பிரபு, 21; டிரைவர். இவருக்கு நேற்று முன்தினம் வயிற்று வலி ஏற்பட்டது. தனது உறவினருடன், செஞ்சேரிமலை பகுதியில் உள்ள, தாஸ் மெடிக்கல் சென்டருக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் விக்டர் ஜீவராஜ், அவருக்கு ஊசி செலுத்தி உள்ளார்.அதன் பின் வீட்டில் இருந்த பிரபு, கழிப்பறைக்கு சென்றுள்ளார். அங்கு மயங்கி சரிந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.தகவல் அறிந்த சுல்தான்பேட்டை போலீசார், பிரபுவின் உடலை மீட்டனர். பிரபுவின் உயிரிழப்பிற்கு, டாக்டர் விக்டர் ஜீவராஜின் தவறான சிகிச்சையே காரணம் எனக் கூறி, அவரது உறவினர்கள் இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் தாஸ் மெடிக்கல் சென்டர் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன் பின் அவர்கள் கலைந்து சென்றனர். போலீசார், டாக்டர் விக்டர் ஜீவராஜை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர். தகவலின் பேரில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகரன், மெடிக்கல் சென்டருக்கு சென்று விசாரித்தார்.அதில், தாஸ் மெடிக்கல் சென்டர் என்ற பெயரில், கிளினிக் நடத்தி வரும் விக்டர் ஜீவராஜ், ஜார்ஜியாவில் மருத்துவம் முடித்ததும், இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்கான தேசிய மருத்துவ கவுன்சில் நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெறாமல், சட்டவிரோதமாக கிளினிக் நடத்தி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.இதையடுத்து, சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விக்டர் ஜீவராஜிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.