உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் விவசாய நிலப்பரப்பு இப்படி குறைகிறதே! தடுக்க செய்ய வேண்டியதென்ன

கோவையில் விவசாய நிலப்பரப்பு இப்படி குறைகிறதே! தடுக்க செய்ய வேண்டியதென்ன

தொண்டாமுத்தூர்; கோவை மாவட்டத்தில், விவசாய கூலித்தொழிலாளர்கள் பற்றாக்குறை, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்ற பல காரணங்களால், கடந்த சில ஆண்டுகளில், விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. இதை தடுக்க அரசு முன்வர வேண்டும் என, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையில், 30 சதவீதம் பேர், விவசாயம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாவட்டத்தின் பிரதான தொழிலில், விவசாயம் முக்கிய இடம் வகிக்கிறது.தென்னை, பாக்கு, சின்ன வெங்காயம், தக்காளி, மஞ்சள் போன்ற பயிர்கள் முக்கிய பயிராக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது, மாவட்டத்தில், சுமார் 4.30 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பிரச்னைகள், ரியல் எஸ்டேட் அதிகரிப்பு, வளர்ச்சி பணிகள், குடியிருப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களால், மாவட்டத்தில், விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. எடுத்துக்காட்டாக, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 2020- - 21ம் ஆண்டில், நிகர விவசாய பரப்பு, 29,631 ஏக்கராக இருந்தது. 2021--22ம் ஆண்டில், இது 28,746 ஏக்கராகவும், 2022--23ம் ஆண்டில், 28,090 ஏக்கராகவும் குறைந்துள்ளது. மூன்றாண்டுகளில் மட்டும், 1,541 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு குறைந்துள்ளது.இதுகுறித்து, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி கூறியதாவது:தற்போது விவசாய கூலி பணியாளர்களிடம், முந்தைய காலங்களை போல், பணித்திறன் இல்லை. மலை அடிவார பகுதி மட்டுமன்றி, பல கி.மீ., தள்ளி உள்ள, விலை நிலங்களுக்குள்ளும், வனவிலங்குகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டமும், பாதிப்பும் ஏற்படுகிறது.விவசாயி, விதை மற்றும் நாற்றுகளை வாங்கும்போது இருக்கும் விலை, சாகுபடி செய்து விற்பனை செய்யும்போது கிடைப்பதில்லை. விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. விவசாயத்திற்கு, முழுமையான மின்சாரம் கொடுப்பதில்லை.100 நாள் வேலைக்கு செல்வதால், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுபோன்ற காரணங்களால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு, விளைநிலங்களை, ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றனர்.இதனால், மாவட்டத்தில் விவசாய நிலப்பரப்பு குறைந்து வருகிறது. ஆனால், மற்ற மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது. விவசாய பரப்பு குறைவதை தடுக்க, மொத்த வியாபாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மொத்த மார்க்கெட்களை, அரசின் கையில் கொண்டு வரவேண்டும்.விலை குறைவாக உள்ளபோது, அரசே விளைபொருட்களை கொள்முதல் செய்து, இருப்பு வைத்துக்கொண்டு, தட்டுப்பாடு ஏற்படும்போது, விற்பனை செய்ய வேண்டும். அப்போது, விலைவாசி உயர்வு இருக்காது. விவசாயிகள் மற்றும் நுகர்வோர் என, இருதரப்பினருக்கும், பாதிப்பு இருக்காது. வனவிலங்குகளால் பயிர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, ஆணித்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சம்பா
டிச 29, 2024 06:21

இதுக்கு பாருங்க எவ்வளவு கமென்டுனு எங்க போயி விவசாயம்?


சம்பா
டிச 28, 2024 06:57

இறுதிகட்டத்தில் இருக்குது யாரலும் மீட்க முடியாது காரணம் ஏராளம்


முக்கிய வீடியோ