நிறைவடைந்தது பேர் புரோ கண்காட்சி 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வருகை
கோவை, ; 'கிரெடாய்' கோவை சார்பில், 'பேர் புரோ' வீடு வாங்குவோருக்கான மூன்று நாள் கண்காட்சி, கடந்த 8ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது. கண்காட்சியில் 30க்கும் மேற்பட்ட பில்டர்கள், வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், கட்டுமானப் பொருள் நிறுவனங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. 100க்கும் மேற்பட்ட திட்டங்கள், மனை முதல் விடுமுறைக்கால தங்குமிடங்கள் வரை அனைத்து பட்ஜெட்களிலும் இடம் பெற்றிருந்தன. முதல் நாளில் இருந்தே ஏராளமானோர் பங்கேற்று, திட்டங்கள் குறித்து விசாரித்து அறிந்தனர். கிரெடாய் தலைவர் அரவிந்த் குமார் கூறியதாவது: கண்காட்சிக்கு முதல் நாளில் இருந்தே, நல்ல வரவேற்பு இருந்தது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர். வெறும் வேடிக்கை பார்ப்பதற்கான கூட்டமாக இல்லாமல், மனை, வீடு வாங்க வேண்டும், முதலீடு செய்ய வேண்டும் என, தீர்க்கமான முடிவோடு வந்திருந்தவர்களே அதிகம். இதனால், வர்த்தக விசாரணைகளும் திருப்திகரமாக இருந்தன. பார்வையாளர்களை இடம், கட்டுமானத் திட்டங்களை நேரில் பார்வையிட அழைத்துச் செல்ல வசதி செய்யப்பட்டிருந்ததால், ஏராளமானோர் நேரில் பார்வையிட்டனர். கண்காட்சியிலேயே நிறைய முன்பதிவுகள் நடந்துள்ளன. தொடர்ந்து வர்த்தக விசாரணைகள் வந்த வண்ணம் உள்ளன. இது, இருதரப்பினருக்கும் திருப்திகரமான கண்காட்சியாக அமைந்தது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.