| ADDED : பிப் 09, 2024 11:41 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில், குப்பை அள்ள பேட்டரி வாகனங்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.கிணத்துக்கடவு ஒன்றியத்தில், 34 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் மக்கள் தொகை உள்ளது. கிராமங்களில் துாய்மை பணியில், 143 துாய்மை காவலர்கள் பணியாற்றுகின்றனர்.இதில், ஒரே ஒரு வருவாய் கிராமம் மட்டும் கொண்ட ஊராட்சியும் உள்ளது. நான்கு முதல் ஐந்து கிராமங்கள் கொண்ட ஊராட்சிகளும் உள்ளன. ஊராட்சிகளில் பெரிய பிரச்னையே திடக்கழிவு மேலாண்மை தான்.ஒரு சில கிராமங்களில் குப்பையை முறையாக தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பை என சேகரிக்கின்றனர். ஆனால் ஒரு சில ஊராட்சிகளில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை கடைபிடிக்காமல் உள்ளனர்.மேலும், துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், குடியிருப்பு பகுதிகளில் குப்பையை தரம் பிரித்து பெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சில பகுதிகளில் குப்பையை அகற்றப்படாமல் தேங்குவதால், சுகாதாரம் பாதிக்கிறது.துாய்மை பணியாளர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில், வீதி வீதியாக அலைந்து குப்பை சேகரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற இன்னல்களால், துாய்மை பணியாளர்கள் அவதிப்படுகின்றனர்.இதற்கு தீர்வு காணும் வகையில், முதற்கட்டமாக, துாய்மை பாரதம் இயக்கம் மற்றும் 15வது நிதி குழுவில் இருந்து, தலா மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள, நான்கு பேட்டரி வண்டிகள், கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதை சிறுகளந்தை, ஆண்டிபாளையம், முள்ளுப்பாடி மற்றும் சொலவம்பாளையம் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.அடுத்த கட்டமாக, 28 பேட்டரி வண்டிகள் வாங்க கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. இதனால் ஊராட்சிகளில் குப்பை அகற்றும் பணி எளிதாகும். தூய்மை பணியாளர்களுக்கு பணி சுமை குறையும், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.