கோவை;பெண்களை கட்டிப்போட்டு, 37 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள் ஐ.டி., அதிகாரிகள் போல் நடித்தது தெரியவந்துள்ளது.குஜராத்தை சேர்ந்த கமலேஷ், 50. ஆர்.எஸ்.புரம் மேற்கு ஆரோக்கியசாமி வீதியில் தங்கி பருத்தி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மருதமலை கோவிலுக்கு சென்றிருந்தபோது, அவரது வீட்டிற்குள் புகுந்த, 10க்கும் மேற்பட்ட கொள்ளையர், அவரது மனைவி ரூபல், மகன் மிகர் மற்றும் வேலைக்கார பெண்ணை அரிவாள், கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு, ரூ.9 லட்சம் மற்றும், 37 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் ஐ.டி., அதிகாரிகள் போல் நடித்து மிரட்டியது தெரியவந்துள்ளது.இதுகுறித்து, போலீசார் கூறியதாவது:கொள்ளை கும்பலில் இருந்த உயரமான நபர், வழி நடத்தியுள்ளார். அந்த நபர் மிகரிடம், 'நாங்கள் ஐ.டி., அதிகாரிகள், உங்கள் தந்தை எங்கே போனார். சரியாக கணக்கு காட்ட மாட்டீர்களா, எவ்வளவு கோடி ரூபாய் பதுக்கி வைத்துள்ளீர்கள். ஹவாலா பணம், நகை எல்லாம் எங்கே உள்ளது' என ஆங்கிலத்தில் கேட்டுள்ளார். பணம், நகையை எடுத்து தரச் சொல்லி கேட்டுள்ளார். சுமார், 20 நிமிடம் மிகர் மற்றும் அவரது தாயாரிடம் மாறி, மாறி விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் வளைந்து கொடுக்காததால் கத்தி, அரிவாளை காட்டி மிரட்டி கட்டிப்போட்டுள்ளனர். பணம், நகையை கொள்ளை அடித்து சென்று உள்ளனர்.அதிகாரியாக நடித்த நபர், மிகரிடம் விசாரணை செய்து கொண்டிருந்த போது, மிகர் அவரது தந்தைக்கு போனில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த கொள்ளையன் மொபைல் போன் அழைப்பை துண்டித்து அங்கிருந்த, 4 மொபைல் போன்களை பறித்துள்ளான். அந்த மொபைல் போன்கள் இதுவரை 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய கார் பதிவு எண்கள் போலி என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் வந்த கார் சரவணம்பட்டி வரை சென்றுள்ளது. அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்தி உள்ளனர். காரை விட்டு இறங்கிய ஒருவன், முகமூடியை அகற்றி தண்ணீர் குடித்துள்ளான்.அந்த காட்சி அங்குள்ள கேமராவில் பதிவாகி உள்ளது. அவர்கள் கர்நாடகா சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில், தனிப்படையினர் அங்கு விரைந்து உள்ளனர். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.