சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க அரசு மானியம் அளிக்க வேண்டும்
கோவை; தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், 15வது பிரதிநிதிகள் மாநாடு, கேரளா கிளப்பில் நேற்று நடந்தது.மாநாட்டுக்கு தலைமை வகித்த, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின், மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது: சிறுதானிய உற்பத்தி குறித்து, விவசாயிகள் தெரிவித்த கருத்துக்களை ஏற்று, அரசின் பல்வேறு திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன.விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறுதானியங்களுக்கு, போதிய விலை கிடைப்பதில்லை. உற்பத்தி செலவு கூட கிடைக்காமல், நஷ்டம் ஏற்படுகிறது. சிறுதானிய உற்பத்தியை அதிகரிக்க, விவசாயிகளுக்கு அரசு போதிய அளவு மானியம் அளிக்க வேண்டும். பால் உற்பத்தி மற்றும் வன விலங்குகள் பிரச்னைகளை தீர்க்கவும், அரசு முன் வர வேண்டும்.தற்போது விவசாய நிலங்களின் பரப்பளவு குறைந்து வருகிறது. அதற்கு, ரியல் எஸ்டேட் தொழில்தான் காரணம். கிராமங்கள் அழிந்து, நகரமயமாவது ஆரோக்கியமான வளர்ச்சியாக இருக்காது. நீரையும், நிலத்தையும் பாதுகாக்க, அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.