264 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் கோவையில் நேற்று கோலாகலம்
கோவை; கோவை முத்தண்ணன் குளத்தில், 264 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, 27ல் ஹிந்து அமைப்புகள், குடியிருப்போர் சார்பில் பொது இடங்களில், இரண்டடி முதல், 10 அடி வரையிலுமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தன. கோவை மாநகரில் மொத்தம், 712 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. பல்வேறு பகுதிகளிலும் அமைக்கப்பட்ட சிலைகள்விசர்ஜனம் கடந்த,29ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட சிலைகள், கோவை முத்தண்ணன் குளத்தில் விசர்ஜனம் செய்யப்பட்டன. திரளானோர் பங்கேற்றனர். போலீஸ் துணை கமிஷனர் தலைமையில், உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்கள் என, 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குளத்தின் அருகில் உள்ள ரோடுகள் உள்ளிட்ட பகுதிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டன. சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள், பூக்களை பெற மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். நேற்று ஒரே நாளில், 264 சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டன.கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர், விசர்ஜனம் நடந்த முத்தண்ணன் குளத்தில் ஆய்வு செய்தார்.