மழையின் தீவிரம் குறைந்தது; சாரல் நிலவுவதால் மகிழ்ச்சி
வால்பாறை; வால்பாறையில் பெய்யும் சாரல் மழையினால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கியது. தொடர் மழையால், பி.ஏ.பி., பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணை இந்த ஆண்டில் ஏழு முறை நிரம்பியது. மேலும், ஆழியாறு, பரம்பிக்குளம் உள்ளிட்ட அனைத்து அணைகளும் நிரம்பின. இதனால் பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், வால்பாறையில் கடந்த நான்கு நாட்களாக மழைப்பொழிவு முற்றிலுமாக குறைந்து, சாரல் மழை மட்டுமே பெய்கிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து குறைந்து வருவதால், சுற்றுலா பயணியர் நடுமலை ஆற்றில் குளித்து மகிழ்கின்றனர். சிதோஷ்ண நிலை மாற்றத்தால் எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் பனிமூட்டம் தேயிலை செடிகள் மீது படர்ந்து ரம்யமாக காட்சியளிக்கிறது. பருவமழைக்கு பின் வால்பாறையில் குளுகுளு சீசன் துவங்கியுள்ளதால், சுற்றுலா பயணியர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.