உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெயர்ந்து விழும் பழமை கோர்ட் கட்டடம்; புதிய கட்டட பணி எப்ப முடியும்

பெயர்ந்து விழும் பழமை கோர்ட் கட்டடம்; புதிய கட்டட பணி எப்ப முடியும்

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஜே.எம்.,1 கோர்ட் கட்டடத்தில், நள்ளிரவு கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. கட்டடம் சிதிலமடைந்த நிலையில், புதிய ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. பொள்ளாச்சியில், ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க அ.தி.மு.க., ஆட்சியில், கடந்த 2016ல் கோவை ரோடு, அண்ணா நகர் மேடு பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான, 3.25 ஏக்கர் நிலம், கோர்ட் வசம் ஒப்படைத்தது. இதை தொடர்ந்து, 10 விசாரணை அறைகள், நீதிபதிகள், அரசு வக்கீல்கள் அறைகள், வக்கீல்கள் சங்க கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டது.அதே வளாகத்தில், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றமும், கூடுதல் சார்பு நீதிமன்றமும் அமைக்கவும் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது. நீதிபதிகள் குடியிருப்புகளும் கட்டப்படுகிறது. மொத்தம், 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுமான பணிகள் நடக்கிறது. இப்பணிகளை தொடர்ந்து, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில், கூடுதலாக, 15 கோடி ரூபாய் தேவை என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, தமிழக முதல்வர், ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டடத்துக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கு ஏதுவாக, 14 கோடியே, 59 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். கடந்த, ஓராண்டாக கோர்ட் வளாக பணிகள் தீவிரமடைந்துள்ளன. அதில், கோர்ட் வளாகத்தை சுற்றியும் சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடையாததால் பழமையான கட்டடங்களில் கோர்ட்கள் செயல்படுகின்றன. இச் சூழலில், நள்ளிரவு ஜே.எம்., 1 கோர்ட் மேற்கூரை கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. நேற்று காலை அவை சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் கோர்ட் செயல்பட்டது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பழமையான கோர்ட் வளாகத்தில் கட்டடம் சேதமடைந்துள்ளது. எப்போது வேண்டுமென்றாலும் கீழே விழும் நிலையில் மேற்கூரை உறுதியின்றி உள்ளது. பொதுமக்கள், வக்கீல்கள் பலரும் வந்து செல்லும் நிலையில், கோர்ட் பராமரிப்பின்றி உள்ளதால் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கட்டடம் முழுமையாக இடிந்து விழுவதற்கு முன், புதிய கோர்ட் கட்டடப்பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

கட்டடம் கட்டி 5 ஆண்டுகளாச்சு!

எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறுகையில், ''ஒருங்கிணைந்த நீதிமன்றம் வேண்டும் என சட்டசபையில் கோரிக்கை விடுத்தும், அப்போதைய முதல்வர் பழனிசாமியிடம் வலியுறுத்தினேன். அதன்பேரில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதால், சுற்றுச்சுவர் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடக்கின்றன.ஒரு கட்டடத்தின் உறுதி தன்மை, 35 ஆண்டுகள் என்றால், இந்த புதிய கட்டடம் கட்டியே ஐந்துஆண்டுகள் முடிவடைந்துள்ளது. பழமையான கட்டடங்கள் சேதமடைந்து வரும் நிலையில், புதிய கட்டட பணிகளை விரைந்து முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ