| ADDED : நவ 23, 2025 06:36 AM
கோவை: கோயம்புத்துார் விழாவை முன்னிட்டு, கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான, ஓவிய வீதி கண்காட்சி, நேற்று துவங்கியது. கோவை அரசு கலைக்கல்லுாரி வளாகத்தில் நடக்கும், இந்த ஓவிய கண்காட்சியில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஓவியர்கள், தங்களின் ஓவியங்களை காட்சிக்கு வைத்துள்ளனர். இதில், ஆயில் பெயின்டிங், வாட்டர் கலர் மற்றும் அக்ரலிக் பெயின்டிங், இந்திய மரபு சார்ந்த ஓவியங்கள், பயர் ஆர்ட், ஓவிய வேலைப்பாடுகள் உள்ள கலைப் பொருட்கள் என, ஏராளமான படைப்புகள் இடம் பெற்றுள்ளன. நித்தில்யம் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறன் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள், அனைத்து பார்வையாளர்களின் கவனத்தையும் கவர்ந்துள்ளன. மாற்றுத்திறன் குழந்தைகளின் ஆர்ட் கேலரியை துவக்கி வைத்த ஓவியர் ஜீவா கூறுகையில், ''கோயம்புத்துார் விழா சார்பில் நடத்தப்படும் இந்த ஓவிய வீதி கண்காட்சி, கோவையில் உள்ள ஓவிய ரசிகர்களுக்கு கிடைத்து இருக்கும் அரிய வாய்ப்பாகும். ஒரே இடத்தில் இத்தனை ஓவியர்களின் கைவண்ணங்களை பார்த்து ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் மாற்றுத்திறன் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் சிறப்பாக உள்ளன. குறைபாடு உடலில் இருந்தாலும், மனதிலும், சிந்தனையிலும் எந்த குறையும் இல்லை என்பதை, மாற்றுத்திறன் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் நமக்கு உணர்த்துகின்றன,'' என்றார். காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை நடக்கும் இந்த கண்காட்சி, இன்று முடிவடைகிறது.