உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி மாஜி; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!

சொத்து வாங்கி குவிக்கறாரு ஆளுங்கட்சி மாஜி; அன்னுார்ல கோஷ்டிகளா பிரிஞ்சு கிடக்குது கட்சி!

ரேஸ்கோர்சில் 'வாக்கிங்' சென்று கொண்டிருந்த சித்ராவும், மித்ராவும் சற்று ஓய்வெடுக்க இருக்கையில் அமர்ந்தனர்.அப்போது மித்ரா, ''கணபதி மாநகர்ல மாநகராட்சி ஏற்பாடு செஞ்சிருந்த மரம் நடும் விழாவுல, ஸ்கூல் குழந்தைகளை மூனு மணி நேரத்துக்கு மேல காக்க வச்சுட்டாங்களாமே,'' என்று துவங்கினாள்.''அடக் கொடுமையே,'' ''மேல கேளுங்க...காலை, 10:15 மணிக்கு துவங்க வேண்டிய விழா, அதிகாரிங்க, அரசியல்வாதிங்க வர்றதுக்கு லேட் ஆனதால, 11:00 மணிக்குதான் துவங்கியிருக்கு. அதுகூட பரவாயில்லை... மாணவர்களை காலை, 7:30 மணிக்கே வரவச்சுட்டாங்களாமே. பசியில சோர்வா இருந்திருக்காங்க,''''விழா மேடைக்கு கொஞ்சம் பக்கத்துல, மேல போற கரன்ட் கம்பி அறுந்து விழுந்திருக்கு. நல்ல வேளையா எந்த விபத்தும் நடக்கல. உடனடியா இ.பி.,காரங்க வந்து சரி செஞ்சுட்டாங்களாம்,''.

பதவி உயர்வு

''ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர் வரப்போகுதுன்னு சொல்றாங்களே... ஏதாவது தகவல் உண்டா,'' என்று கேட்டாள் மித்ரா.''ஆமாக்கா... நானும் கேள்விப்பட்டேன். 15 மாவட்டங்களில் கலெக்டர்களை மாற்ற போறாங்களாம். அதனால இப்பவே லிஸ்ட் தயாராகிட்டு இருக்கு. சிலர் பதவி உயர்வு பெற்று கலெக்டர் ஆகலாம்,''''அதேபோல, சீனியர் டி.ஆர்.ஓ.,களுக்கு கலெக்டர் புரமோஷன் கிடைக்கும்னு சொல்றாங்க. அந்த லிஸ்ட்டுல நம்ம மாநகராட்சி கமிஷனருக்கும், டி.ஆர்.ஓ.,வுக்கும் வாய்ப்பு கிடைக்கும்னு அதிகாரிகள் வட்டாரத்துல டாக் ஓடுது,''

அசைக்க முடியாத 'மாஜி'

''ஆளுங்கட்சியை சேர்ந்த மாஜி ஒருத்தர், கோடிக்கணக்குல சொத்துக்களை வாங்கி குவிக்கிறாராமே,''''ஆமாப்பா... உண்மைதான். இதுக்கு முன்னால மக்கள் பிரதிநிதியா இருந்த அந்த மாஜி, இந்த நாலு வருஷத்துல மட்டும் கிட்டத்தட்ட, 300 கோடி ரூபாக்கு சொத்து வாங்கி குவிச்சிருக்காராம். கோத்தகிரியில் கூட ஒரு தோட்டம் வாங்கி இருக்கறதா, உடன் பிறப்புங்க பேசிக்கிறாங்க,''''நம்மூர்லயும் ஏழு இடங்கள்ல பிளாட் வாங்கியிருக்காராம். சிலரை பினாமிகளா நியமிச்சு, ரியல் எஸ்டேட் பிசினஸ்ல முதலீடு செஞ்சுட்டு வர்றாராம். இதெல்லாம் சீனியர் உடன்பிறப்புகளிடையே பொறாமையை ஏற்படுத்தி இருக்கு,''''ஓகோ...''''ஐ.டி., 'ஸ்கெட்ச்' போட்டாலும் தப்பிக்கிறதுக்கு ஆள் வச்சிருக்கறதா கட்சிக்காரங்க சொல்றாங்க. அவர்கிட்ட இருக்கற கட்சிப் பதவியை எப்படியாவது பறிக்கணும்னு, ஒரு குரூப் மறைமுகமா வேலை செய்யுதாம்,''.

தாசில்தார் ஆபீசுல லஞ்சம்

''கோவை வடக்கு தாலுகா தாசில்தார் ஆபீசுல, லஞ்ச பணத்தை டிரைவர் ஒருத்தரும், இன்னொருத்தரும் 'அபேஸ்' செஞ்சுட்டதா செய்தி பரவுதே,''''என் காதுக்கும் வந்துச்சு. அது உண்மையா, இல்லையானு தாசில்தார் விசாரிக்கிறாராமே. நானும் கொஞ்சம் ஆழமா விசாரிச்சேன். பெ.நா.பாளையத்தில் இருந்து, ஸ்கூல் கட்டட லைசென்ஸ் ரெனிவலுக்கு, அரசியல் பிரமுகர் ஒருத்தர் சிபாரிசின் பேர்ல வந்தவர், ரூ.43 ஆயிரத்தை அனுப்பர்பாளையம் வி.ஏ.ஓ., ஆபிசுல ஒருத்தர்கிட்ட குடுத்துருக்காரு. அவர், இப்ப வடக்கு தாசில்தார் ஆபீஸ்ல டிரைவரா இருக்கார். அதேபோல், இதர வழியில் வந்த மொத்தம் ரூ.83 ஆயிரத்தையும் அவரும் இன்னொருத்தரும் அமுக்கிட்டாங்களாம்,''.

சரக்கு விற்பனை 'ஜோர்'

''கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டுக்கு, சில மீட்டர் துாரத்துல வரசித்தி விநாயகர் கோவில், பக்கத்துல பள்ளிவாசலுக்கு சில மீட்டர் துாரத்துல, ஒரு 'டாஸ்மாக்' இருக்கு. பக்கத்துல இருக்கற ஒரு பேக்கரில ராத்திரி 10:00 மணிக்கு பிறகு, சரக்கு விக்கிறாங்களாமே,''''நானும் கேள்விப்பட்டேன். இதை கேளு. அன்னுார் வட்டாரத்துல மனமகிழ் மன்றம்ங்கற கிளப் துவங்கற உரிமத்துக்கு பல லட்சம் ரூபாயை, அந்த ஏரியா ஆளுங்கட்சி பிரமுகர்கிட்ட ஒருத்தரு கொடுத்து ஏழு மாசம் ஆச்சு. உரிமமும் கிடைக்கல; கொடுத்த பணமும் கிடைக்காம, பணம் கொடுத்தவர் கண்ணீர் வடிக்கிறாராம்,''- பேசியபடியே, இருவரும் மெல்ல எழுந்து மீண்டும் நடக்க ஆரம்பித்தனர்.

கோஷ்டி பூசல்!

''அன்னுார் ஒன்றிய தி.மு.க.,வுல கோஷ்டி பிரச்னை நிலவுதாமே,''''இப்ப ரெண்டு ஒன்றிய செயலாளர்கள், ஒரு பேரூர் கழக செயலாளர்ஆகியோர் ஒரு டீமாவும், முன்னாள் ஒன்றிய செயலாளர்,முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஒரு டீமாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை தனித்தனியா கொண்டாடியிருக்காங்க. தேர்தலுக்கு இன்னும், 10 மாதங்களே இருக்கற நேரத்துல, இப்படி ரெண்டு கோஷ்டிகளா பிரிஞ்சு இருக்கறதை பார்த்து, அ.தி.மு.க., காரங்க சந்தோஷத்துல துள்ளிக்குதிக்கிறாங்களாம்,''''ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குதானே கொண்டாட்டம்... நம்ம மாவட்ட ஊராட்சி செயலர்கள்ல சில பேரு ஒரே ஊராட்சியில், 10 வருஷத்துக்கு மேல இருக்காங்களாம். பி.டி.ஓ.,வுல இருந்து உதவி இயக்குனர், உயர் அதிகாரிகள் வரை கவனிச்சுக்கிறாங்களாம். சமீபத்துல, ஊராட்சி செயலர்கள் பல பேரை டிரான்ஸ்பர் செஞ்சாங்க. அதிகாரத்துல ஆட்டி படைக்கறவங்க சொல் பேச்சை கேட்காததுதான் காரணமாம்,''

பொய் கணக்கு!

''சில ஊராட்சி மன்றங்கள்ல மன்ற தலைவர், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிஞ்சப்போ, பெரும்பாலான ஊராட்சிகள்ல குறிப்பிட்டஅளவு தொகையைவளர்ச்சி பணிகளுக்காக வச்சுட்டு போயிருக்காங்க. அந்த தொகையை, போலி கணக்கு எழுதி குடுக்க, ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலபேரு பிரஷர் குடுக்கறாங்களாம்,''''பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட, சில ஊராட்சிகள்ல,வளர்ச்சி பணிகளுக்கான தொகையை அடிச்சுட்டு, ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலபேரு போலி கணக்கு எழுத சொல்றதா,சில அதிகாரிகளே புலம்புறாங்களாமே,''''அதை விடு...சோமையம்பாளையம் ஊராட்சியில, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர், நிர்வாகத்துல தலையிட்டு, தனக்கு வேண்டியவங்களை அப்பாயின்ட் பண்ணியிருக்காராம். அதோட, சோமையம்பாளையம் குப்பை கிடங்குல, ஜே.சி.பி., வாடகை விஷயத்துல ரூ.25 லட்சம் பொய் கணக்கு எழுதி கொள்ளையடிச்ச தகவல்தான், இப்ப அங்க ஹாட் டாபிக். ''இது சம்பந்தமா ஆளுங்கட்சிக்காரங்களே தலைமைக்கு புகார் அனுப்பியிருக்காங்க,'' என்றபடி ஓரிடத்தில் அமர்ந்தாள் சித்ரா.- இருவரும் வியர்த்து டயர்டாகி விட, பாட்டிலை திறந்து கடகடவென தொண்டைக்குள் தண்ணீரை இறக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை