கீதையின் போதனைகள் எப்போதும் பொருந்தும்
கோவை : ''கீதையின் போதனைகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது,'' என, பக்தி வினோத சுவாமி மாகராஜ் பேசினார்.கோவையில் இஸ்கான் அமைப்பு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான 'கீதாதான்' ஆன்மீக மற்றும் நன்னெறி கல்விக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, உப்பிலிப்பாளையத்தில் உள்ள சாய் விவாக மகாலில் நேற்று நடந்தது.இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பக்தி வினோத சுவாமி மாகராஜ் பேசியதாவது:கீதையின் போதனைகள் எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் உள்ளது. சுய ஒழுக்கம், மனநிறைவு பெற உதவுவதுடன் சவால்களை எதிர்கொள்ளவும், உள்ளத்தின் வலிமையை வளர்க்கவும் உதவும்.இந்தியாவின் ஆன்மிகம் ஞானத்தை மட்டுமல்லாமல் அறிவியல், கணிதம், தத்துவத்தின் முக்கியத்துவத்தையும் போதிக்கிறது.கீதையின் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மூலம், குழந்தைகள் பொறுப்பான மற்றும் அறிவொளி பெற்றவர்களாக வளர்ந்து, இந்த சமூகத்திற்கு சேவை செய்வார்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.என்.எம்.மருத்துவமனை தலைவர் நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.