| ADDED : நவ 22, 2025 07:13 AM
சூலூர்: சின்னியம்பாளையத்தில் திடீரென ரோட்டை அடைப்பதும், திறப்பதுமாக இருப்பதால், மக்கள் ரோட்டை கடக்க முடியாமல், அவதிக்குள்ளாகி உள்ளனர். அவிநாசி ரோடு சின்னியம்பாளையத்தில், யு டேர்ன் அடைக்கப்பட்டதால், சிக்னல் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். நீண்ட இழுபறிக்கு பின் சிக்னல் அமைக்கப்பட்டது. மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனால், போலீசார் திடீர் திடீரென சிக்னலை நிறுத்தி, ரோட்டை அடைத்து விடுகின்றனர். இதனால், மக்கள் ரோட்டின் ஒரு புறத்தில் இருந்து மறு புறம் செல்ல, ஒரு கி.மீ., தூரம் சுற்றி வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'சின்னியம்பாளையத்தில் ரோட்டை கடக்க தினமும் முடியாமல் தவிக்கிறோம். சிக்னல் இருக்கும் இடத்தை திடீரென அடைத்து விட்டு, ஒரு கி.மீ., தூரம் சுற்றி வர போலீசார் கூறுகின்றனர். இதனால், புதூர் பிரிவு, மயிலம் பட்டி பிரிவுக்கு சென்றாலும் ரோட்டை கடக்க முடிவதில்லை. கோல்டு வின்ஸ் முதல் நீலம்பூர் வரை, இருபுறமும் ரோடு முழுக்க வாகன நெரிசல் தான். எங்கள் ஊரில் சிக்னலை திறந்து, போக்குவரத்து போலீசார் போலீசாரை நியமித்தால் தான் பிரச்னை தீரும்' என்றனர்.