பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. திரளான பக்தர்கள் பங்கேற்க, 85 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள, ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நேற்று கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. இதற்காக, அடர் வனப்பகுதியிலிருந்து, 85 அடி உயரமுள்ள மூங்கில் மரம் கொண்டு வரப்பட்டு, சர்க்கார்பதி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கம்பம், ஊர்வலமாக ஆனைமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து, உப்பாற்றங்கரையில் கம்பத்திற்கு வஸ்திரம், மலர் மாலைகள் சாற்றி, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அதன்பின், முறைதாரர்கள், அருளாளிகள் முன்னிலையில், கோவிலுக்கு ஊர்வலமாக கம்பம் கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில், நேற்று காலை, 9:54மணிக்கு, கொடிக்கம்பம் நடப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் முரளிகிருஷ்ணன், உதவி ஆணையர் விஜயலட்சுமி, அறங்காவலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.மாசாணியம்மன் கோவிலில், கொடியேற்ற நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 25ல் பூமிதித்தல்
வரும், 22ம் தேதி நள்ளிரவு, 1:00 மணிக்கு மயான பூஜையும், 23ம் தேதி காலை, சக்தி கும்பஸ்தாபனம், மாலை மகா பூஜையும் நடக்கிறது. 24ம் தேதி காலை குண்டம் கட்டுதல், மாலை சித்திரத்தேர் வடம் பிடித்தல், இரவு, குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.வரும், 25ம் தேதி காலை 6:30 மணிக்கு மேல், 7:30 மணிக்குள் பக்தர்கள் பூக்குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும், 26ம் தேதி காலை, கொடி இறக்குதல், மஞ்சள் நீராடல், இரவு, மகாமுனி பூஜை நடக்கிறது. 27ம் தேதி காலை மகாஅபிேஷகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.