உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்

மோசமான சாலையால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தம்

அன்னூர்: கணுவக்கரையிலிருந்து புளியம்பட்டி செல்லும் பாதை மோசமாக உள்ளதால் அரசு டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப்பட்டது. அன்னூர் அருகே உள்ள கணுவக் கரையிலிருந்து, கண்ணப்ப நகர், ஆலபாளையம், காந்தி நகர் வழியாக கோவை சத்தி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நீலிபாளையத்தில் சேர்ந்து அங்கிருந்து புளியம்பட்டி வரை ஏ ஆர் 1 அரசு டவுன் பஸ் இயங்கி வந்தது. தற்போது இந்த வழித்தடத்தில் பாதை மோசமாக உள்ளதால் டவுன் பஸ் இயக்கம் நிறுத்தப் பட்டுவிட்டது. இது குறித்து கணுவக்கரை மக்கள் கூறுகையில், 'கணுவக்கரையில் நடுநிலைப்பள்ளி மட்டுமே உள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் மற்றும் கல்லூரிக்கு செல்வோர் கணுவக் கரையிலிருந்து புளியம்பட்டி செல்கின்றனர். இங்கு பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஏ ஆர் 1 டவுன் பஸ் திடீரென நிறுத்தப்பட்டு விட்டது. இது குறித்து போக்குவரத்து ஊழியரிடம் கேட்டபோது சாலை மிக மோசமாக உள்ளது. டயர் பழுதாகிறது. வாகனமும் பழுதாகிறது. என்று கூறிவிட்டனர். இந்தப் பாதையில் சாலை அமைத்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. இது குறித்து பலமுறை அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இப்பகுதி மாணவ, மாணவியர் தற்போது இந்த பாதையில் செல்லும் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணம் செய்தபடி புளியம்பட்டி பள்ளிக்கு செல்கின்றனர். விரைவில் இந்த பாதையில் சாலை அமைக்க வேண்டும். மீண்டும் டவுன் பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ