| ADDED : ஜன 26, 2024 12:35 AM
வால்பாறை;வால்பாறை நகராட்சி அலுவலகத்தின் முன், இடிக்கப்பட்ட பயணியர் நிகற்கூரையை மீண்டும் கட்ட வேண்டும், என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.வால்பாறை வட்ட வியாபாரிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஷாஜூ நகராட்சி கமிஷனருக்கு மனு அனுப்பியுள்ளார்.மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகராட்சி அலுவலகம் முன்பாக இருந்த பயணியர் நிழற்க்கூரையை, பள்ளி மாணவர்கள், பயணியர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நகராட்சி அலுவலக விரிவாக்க பணியின் போது, இந்த பயணியர் நிழற்கூரை இடையூறாக இருப்பதாக கூறி, இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது.அப்போது, வேறு இடத்தில் பயணியர் நிழற்கூரை கட்டப்படும் என்று கமிஷனர் உறுதியளித்தார். ஆனால், இன்று வரை பயணியர் நிழற்கூரை கட்டப்படவில்லை. இதனால் வெளியூர் செல்லும் பயணியரும், மாணவர்களும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வால்பாறை மக்களின் நலன் கருதி நகராட்சி அலுவலத்தின் அருகில், மீண்டும் பயணியர் நிழற்கூரை கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.