| ADDED : டிச 30, 2025 05:07 AM
காந்திபுரம்: அவிநாசி ரோடு சுரங்கப் பாதை வழியாக வரும் வாகனங்கள், காட்டூரில் இருந்து வரும் வாகனங்கள், வ.உ. சி., மைதானம் வழியில் வரும் வாகனங்கள், காந்திபுரம் மேம்பாலம் மற்றும் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து வரும் வாகனங்கள், பார்க் கேட் ரவுண்டானாவை சந்திக்கின்றன. காலை, மாலை நேரங்களில் இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் படாதபாடு படுகின்றனர். ரவுண்டானாவை கடந்து, காந்திபுரம் நோக்கி, நஞ்சப்பா ரோட்டில் பயணிக்கும்போது, மறுபடியும் நெருக்கடியில் சிக்குகின்றனர். ரவுண்டானா பகுதியில் இருந்து ராம்நகருக்கு செல்லும் திருப்பம் வரை, ரோட்டை ஆக்கிரமித்து இரு சக்கர வாகனங்கள், வேன்கள், கார்கள் இஷ்டத்துக்கு நிறுத்தப்படுகின்றன. வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடைக்கு முன், ஏராளமான வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்படுகின்றன. அதனருகே உள்ள ஹோட்டல் முன், ரோட்டை ஆக்கிரமித்து தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இவ்விடத்தை வாகனங்கள் கடக்கும்போது ஊர்ந்து செல்ல வேண்டியிருக்கிறது. மேம்பாலத்துக்கு செல்ல வேண்டிய வாகனங்களும், பஸ் ஸ்டாண்ட் நோக்கிச் செல்ல வேண்டியவர்களும் முட்டி மோதிக் கொள்கின்றனர். சனி, ஞாயிறுகளில் சாலையோர கடைகளும் அதிகரித்து விடுவதால், நெருக்கடி இன்னும் அதிகரிக்கிறது. உதிரி பாகங்கள் விற்கும் கடை மீதோ, ஹோட்டல் நிர்வாகம் மீதோ நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்து போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர். இதனால், பார்க் கேட் ரவுண்டானா அருகே தினமும் நெருக்கடி ஏற்படுகிறது. விபத்தில் உயிர் பலி ஏற்படும் முன், நடவடிக்கை எடுப்பது அவசியம்.