கத்தியை காட்டி பணம் பறித்த இருவருக்கு தலா 7 ஆண்டுசிறை !
கோவை ; கத்தியை காட்டி மிரட்டி, லாரி டிரைவரிடம் பணம் பறித்த இருவருக்கு ஏழாண்டு சிறை தண்டனை விதித்து, கோவை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.பொள்ளாச்சி அருகேயுள்ள சூலக்கல் பகுதியில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். லாரி டிரைவரான இவர், கடந்த 2016, ஜூன், 19 ல், சென்னையிலிருந்து லோடு ஏற்றிக்கொண்டு கோவை வந்தார். எல் அண்ட் டி பைபாஸ் ரோடு, நவக்கரை அருகே லாரியை நிறுத்திவிட்டு டீ குடிக்க சென்ற போது, குனியமுத்துார், பிள்ளையார் புரத்தை சேர்ந்த அராப் நிஜார்,29, பக்ருதீன்,31,ஆகியோர் சேர்ந்து கத்தியை காட்டி மிரட்டி, ரவிச்சந்திரன் பாக்கெட்டிலிருந்து, மொபைல் போன் மற்றும் 400 ரூபாயை பறித்து தப்பினர்.கே.ஜி., சாவடி போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது, கோவை மூன்றாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது. விசாரித்த நீதிபதி தமயந்தி, குற்றம் சாட்டப்பட்ட அராப் நிஜார், பக்ருதீன் ஆகியோருக்கு தலா ஏழாண்டு சிறை, தலா 2,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் பி.கிருஷ்ணமூர்த்தி ஆஜரானார்.