இருசக்கர வாகனங்களை திருடியவர்கள் கைது
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, இருசக்கர வாகனத்தை திருடிய நபர்களை, கிழக்கு போலீசார் கைது செய்தனர்.பொள்ளாச்சியை சேர்ந்த சூரியபிரகாஷ்,26, அவரது நண்பரும், இரண்டு இருசக்கர வாகனங்களில் சென்று, கடந்த, 26ம் தேதி அவரது வீட்டின் முன் நிறுத்திச் சென்றார். திரும்பி வந்த போது, வீட்டின் முன் நிறுத்தப்பட்ட இரு இருசக்கர வாகனங்கள் திருடு போனது தெரிந்தது. இதையடுத்து, சூரியபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் விசாரித்தனர்.பொள்ளாச்சியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, இருசக்கர வாகனங்களில் சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார், ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஹென்றி ஜோசப்,24, கபிலன்,24, ஜோதிமுருகன்,25, ஆகியோர் இருசக்கர வாகனங்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், வாகனங்களை பறிமுதல் செய்தனர்.