சார்-பதிவாளர் அலுவலகத்தை சுத்தப்படுத்த வலியுறுத்தல்
ஆனைமலை; ஆனைமலை சார்-பதிவாளர் அலுவலகம் புதர் மண்டி காணப்படுவதால், சுத்தப்படுத்தி பராமரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆனைமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில், 32 கிராமங்களுக்கான பத்திரப்பதிவு, வில்லங்க சான்று பெறுதல் போன்ற சேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த மக்கள் அதிகளவு வந்து செல்கின்றனர். ஆனால், சார்-பதிவாளர் அலுவலகம் போதிய பராமரிப்பின்றி புதர்கள் மண்டி காணப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'மக்கள் நடமாட்டம் உள்ள அரசு அலுவலகமான சார்-பதிவாளர் அலுவலகம் போதிய பராமரிப்பின்றி உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான கட்டடத்தில் இயங்குகிறது. முகப்பு பகுதி புதர்கள் மண்டி பாழடைந்த கட்டடம் போல காட்சி அளிக்கிறது. புதரை கூட அகற்றாமல் அதிகாரிகளும் அப்படியே விட்டுள்ளனர். அரசுக்கு வருமானம் வரக்கூடிய அலுவலக நிலைமை மோசமாக உள்ளது.புதரை அகற்றி துாய்மையாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.