| ADDED : நவ 25, 2025 05:35 AM
வால்பாறை: வால்பாறை அருகே, கரடு, முரடான ரோட்டை சீரமைக்க வேண்டுமென, வேவர்லி எஸ்டேட் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வால்பாறை அடுத்துள்ளது வேவர்லி எஸ்டேட். வாட்டர்பால்ஸ் எஸ்டேட் பிரிவிலிருந்து வேவர்லி எஸ்டேட் வரை செல்லும், 2 கி.மீ.,துாரம் உள்ள ரோட்டில், ஒரு கி.மீ., துாரத்துக்கு மட்டுமே ரோடு உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் நகராட்சி சார்பில் இந்த ரோடு சீரமைக்கப்பட்டது. மீதமுள்ள ஒரு கி.மீ., ரோட்டில், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளதால், வாகனங்கள் செல்ல முடியாமலும், மக்கள் நடந்து செல்ல முடியாமலும் தவிக்கின்றனர். தொழிலாளர்கள் கூறுகையில், 'குடியிருப்பு பகுதிக்கு செல்லும் ஒரு கி.மீ., துாரம் உள்ள ரோடு, மோசமான நிலையில் கரடு, முரடாக உள்ளது. வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த இந்தப்பகுதியில் ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், அரசு பஸ்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. தொழிலாளர்களின் நலன் கருதி, ரோட்டை சீரமைத்து, மீண்டும் அரசு பஸ் இயக்க வேண்டும்,' என்றனர்.