உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ‘வெரிபிகேஷன்’ சான்று!

‘வெரிபிகேஷன்’ சான்று!

வெளி மாநில தொழிலாளர்களுக்கு கட்டாயம்... பணி புரியும் இடத்தில் போலீசார் விழிப்புணர்வுபொள்ளாச்சி: பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம், ஆனைமலை பகுதியில் வேலை செய்யும் பிற மாநில தொழிலாளர்களுக்கு, ‘போலீஸ் வெரிபிகேஷன் சர்டிபிகேட்’ கட்டாயம் என, போலீசார் தெரிவித்தனர். பொள்ளாச்சி வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில், பெரிய நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள், குடிசைத் தொழில், தேங்காய் உலர்களங்கள், கோழிப்பண்ணை, நார் தொழிற்சாலைகள் என, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இங்கு அதிகப்படியாக பீஹார், ஒடிசா, உத்தரபிரதேசம், அசாம், மேற்கு வங்கம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த, ஐந்தாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தனியாகவும், குடும்பத்துடனும் தங்கி ஒப்பந்த முறையிலும், தினக்கூலி அடிப்படையிலும் பணியாற்றுகின்றனர். மேலும், கட்டுமான பணி, விவசாய சார்ந்த தொழிலுக்கு உள்ளூர் ஆட்கள் அதிக தொகையை கூலியாக கேட்பதால், அவர்களுக்கு பதிலாக பிற மாநில தொழிலாளர்களை குறைந்த கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர். மேலும், ஓட்டல்கள், துணிக்கடைகளிலும், வெளிமாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதுடன், வெளி மாநிலத்தை சேர்ந்த நபர்கள் வேலைக்காக தமிழகம் வருவது நாளுக்குநாள் அதிகமாகியுள்ளது. இதில், ஒரு சில வெளி மாநிலத்தவர்கள் அடிதடி, குடும்ப பிரச்னை, தொழில் செய்யும் இடத்தில் தகராறு, போதைப் பொருள் உபயோகிப்பது உள்ளிட்ட காரணங்களால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அந்தந்த மாநிலத்தில் அவர்கள் மீதான குற்ற சம்பவங்களில் இருந்து தப்பிக்க, சிலர் ஒப்பந்ததாரர் வாயிலாக தமிழகத்துக்கு வேலைக்கு வருகின்றனர். இங்கும் குற்றங்களில் ஈடுபட்டு தலைமறைவாகி விடுகின்றனர். இதனால் அவர்களைப் பிடிக்க போலீசுக்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே, தனியார் நிறுவனங்கள் சார்பில் ஏற்கனவே உள்ள வெளி மாநில நபர்கள் மற்றும் வரும் நாட்களில் புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு, ‘போலீஸ் வெரிபிகேஷன் சர்டிபிகேட்’ அளித்த பின் பணியமர்த்த வேண்டும், என, போலீசார் தெரிவித்தனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வெளி மாநிலத்திலிருந்து, நெகமம் பகுதிக்கு வேலைக்கு வரும் நபர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் நிறுவனத்தில் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில், நிறுவனத்தினர் மற்றும் பணியாளர்கள் தொடர்பான முக்கிய வழிமுறைகளை விளக்கியுள்ளோம். மேலும், அனைத்து பணியாளர்களுக்கும் ‘போலீஸ் வெரிபிகேஷன் சர்டிபிகேட்’ கட்டாயப்படுத்தி உள்ளோம். ஒரு நபரை பணியமர்த்தும் போதும், சொந்த ஊருக்கு சென்று திரும்பும் போதும், நிறுவனத்தின் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளோம். பணியாளர்கள் வேலைக்கு வரும்போது போதை பொருட்கள் எடுத்து வருவதால் பல்வேறு வகையில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், அந்த மாநிலத்தில் இருக்கும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு வைத்துக்கொண்டு, தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனைக்கு துணிகின்றனர். இக்குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு, கூறினார்.

மரியாதையாக நடத்துங்க!

வெளி மாநில தொழிலாளர்கள் பணி செய்யும் இடம் மற்றும் தங்கும் இடங்களில், மக்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. அவர்களிடம் எவ்வகையிலும் மனித உரிமை மீறல் இருக்கக்கூடாது. அதே போன்று, பணியாளர்கள் நலன் காக்கும் வகையில், அவர்களுக்கான உரிமையை நிறுவனம் சார்பில் வழங்க வேண்டும். தங்கும் இடங்களில், குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், என, தெரிவித்துள்ளோம். இது மட்டுமின்றி வேலை செய்யும் இடங்களில் நேரடியாக சென்றும் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது, என, நெகமம் போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்