| ADDED : பிப் 09, 2024 09:17 PM
அன்னுார்:கஞ்சப்பள்ளி ஊராட்சியில், கஞ்சப்பள்ளி, தாசபாளையம், குமரகவுண்டன்புதுார் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன; வழியோர கிராமங்களுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தில், பவானி ஆற்றுநீர் வினியோகிக்கப்படுகிறது.இந்நிலையில், தாசபாளையம், குமரக்கவுண்டன்புதுார் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஊருக்குள் இருப்பவர்களுக்கு, 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஊருக்கு வெளியே இருப்பவர்களுக்கு, பல மாதங்களாக குடிநீரே வழங்கப்படவில்லை. இதனால் நான்கு கி.மீ., தொலைவில் உள்ள அன்னுார் வந்து குடிநீர் எடுத்துச் செல்கின்றனர். அன்னுாரிலும் இரண்டு இடங்களில் மட்டுமே பொதுக் குழாய்களில் ஆற்று நீர் வருகிறது. அங்கு காத்திருந்து தண்ணீர் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. இதுகுறித்து, ஊராட்சி தலைவர் சித்ரா கூறுகையில், ''குடிநீர், கஞ்சப்பள்ளிக்கு மட்டும் போதியளவு வருகிறது. குமரகவுண்டன்புதுார் மற்றும் தாசபாளையத்துக்கு, ஆறு மாதங்களாக மிகக் குறைவாக வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல மாதங்களாக புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.