கோவை: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகளில், 85 சதவீத வாக்காளர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் 32,25,198, வாக்காளர்கள் உள்ளனர். இதில், 15,75,259 ஆண்கள். 16,49,251 பெண்கள்; 688 மூன்றாம் பாலினத்தவர். இவர்களுக்கு வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள், ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள் வாயிலாக வழங்கப்பட்டன. பெற்றுக்கொண்ட வாக்காளர்கள், படிவங்களை பூர்த்தி செய்து நிலைய அலுவலர்கள் வசம் வழங்கியுள்ளனர். அருகருகே வீடு மாறி சென்றவர்கள், தொகுதி விட்டு தொகுதி மாறி சென்றவர்கள், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறி சென்றவர்களை போனில் தொடர்பு கொண்டு, அவர்களது விருப்பத்தின் பேரில் ஓட்டு போட வசதி செய்யப்படவுள்ளது. காலமானவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், வேறு மாநிலத்திற்கும், அயல் நாடுகளுக்கும் சென்றவர்களின் பெயரை நீக்குவது தொடர்பாக, தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தலின்படி, மாவட்ட தேர்தல் அலுவலர் முடிவெடுப்பார். 85 சதவீத படிவம் ஓகே மாவட்டத்தில் இதுவரை, 85 சதவீத வாக்காளர்களுக்கு, வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 15 சதவீத வாக்காளர்களுக்கு, படிவங்களை வழங்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார், கோவை கலெக்டர் பவன்குமார். அவர் மேலும் கூறியதாவது: மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது. தகுதியான வாக்காளர்கள் ஒருவர் கூட விடுபடக்கூடாது என்பதை, அடிப்படையாக கொண்டு பணி நடந்து வருகிறது. நிரந்தரமாக பூட்டப்பட்ட வீடுகள், வெளிநாடுகளுக்கு, வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து நிரந்தரமாக சென்றவர்களின் வீடுகளுக்கு, இரண்டாவது முறை நேரில் சென்று விசாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மூன்றாவது முறை இறுதியாக நேரில் விசாரித்து, அதன் பின்பே இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு, கலெக்டர் கூறினார்.
அனைவருக்கும் வாக்காளர்படிவம் வழங்க வேண்டும்
ஓட்டுரிமை என்பது அடிப்படை உரிமை; அது எந்த விதத்திலும் தவறக்கூடாது. வாக்காளர் கணக்கீட்டு படிவங்களை, வீடுகளில் வசிக்கும் அனைவருக்கும் வழங்க வேண்டும். அப்போது தான் கணக்கீடு சரியாக இருக்கும். பட்டியலில் பெயர் இருப்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத பட்சத்தில், அதற்கான படிவங்களை பூர்த்தி செய்து சேர்க்க வேண்டும். வெவ்வேறு தொகுதிகளில் பெயர் இருக்கும் பட்சத்தில், அதை இத்தொகுதிக்கு மாற்ற, தேர்தல் கமிஷன் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வாக்காளர்களும், சமூக அமைப்புகளும் எதிர்பார்க்கின்றன.