சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்ட என்.ஓ.சி., மெட்ரோ ரயில் நிறுவன அனுமதிக்கு காத்திருப்பு
கோவை : சரவணம்பட்டியில் மேம் பாலம் கட்டுவதற்கு, சென்னை 'மெட்ரோ' ரயில் நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெறுவதற்கான முயற்சிகளில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில், சிங்காநல்லுார், சரவணம்பட்டி, சாயிபாபா காலனி ஆகிய இடங்களில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு, ரூ.282.21 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. டெண்டரை இறுதி செய்து பணியை துவக்க இருந்த சமயத்தில், 'மெட்ரோ' ரயில் இயக்குவதற்கான வழித்தடங்களை இறுதி செய்ய இருப்பதால், மேம்பாலங்கள் கட்டும் திட்டங்களை ரத்து செய்ய, தமிழக அரசுக்கு சென்னை 'மெட்ரோ' ரயில் நிறுவனம் பரிந்துரை அனுப்பியது. அதனால், மூன்று மேம்பாலத் திட்டங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.கோவைக்கு 'மெட்ரோ' ரயில் திட்டம் அவசியம் தேவை என்றாலும், மத்திய அரசிடம் அனுமதி பெற்று, நிதி ஒதுக்கி, செயல்பாட்டுக்கு வருவதற்கு இன்னும், சில ஆண்டுகளாகி விடும். தற்போதைய போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க, மூன்று இடங்களிலும் அவசியம் மேம்பாலங்கள் கட்ட வேண்டுமென, தொழில்துறையினர் கோரிக்கை விடுத்தனர்.இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பிலும் கேட்டறியப்பட்டு, தமிழக அரசின் கவனத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. சாயிபாபா காலனி மற்றும் சிங்காநல்லுாரில் மேம்பாலங்கள் கட்டுவதற்கு 'மெட்ரோ' நிறுவனம் தடையின்மை சான்று வழங்கியது.இச்சூழலில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோட்டில் 'மெட்ரோ' ரயில் இயக்க உத்தேச வழித்தட வரை படம் தயாரித்து, மத்திய அரசுக்கு சமர்ப்பித்து இருப்பதால், சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கு அனுமதி வழங்கவில்லை.இச்சூழலில், சமீபத்தில் கோவை வந்திருந்த தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, ''சரவணம்பட்டியில் மேம்பாலம் கட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து வருகின்றனர்,'' என்றார். நான்கு வழி மேம்பாலம்
தேசிய நெடுஞ்சாலைத் துறையினரிடம் கேட்டதற்கு, 'சாயிபாபா காலனியில் மேம்பாலம் கட்டப்படுகிறது. சிங்காநல்லுாரில் கட்டுவதற்கு கோரப்பட்ட டெண்டர் பரிசீலனை நடந்து வருகிறது. ஒப்பந்த நிறுவனம் இறுதி செய்யப்பட்டதும் பணிகள் துவங்கும். சரவணம்பட்டியில் மேம்பாலப் பணியை துவக்க, 'மெட்ரோ' நிறுவனத்திடம் தடையின்மை சான்று பெற வேண்டும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம். சத்தி ரோட்டில், அம்மன் கோவிலில் துவங்கி சரவணம்பட்டி வரை, 1,415 மீட்டர் நீளத்துக்கு, 31 கண்களுடன், நான்கு வழி மேம்பாலம் அமையும்' என்றனர்.