| ADDED : டிச 27, 2025 05:15 AM
கோவை: பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், ஆர்.எஸ்.புரம் சுந்தரம் வீதியில் ரூ.7.70 கோடியில் ஐந்து தளங்களுடன் 55 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் தலா 11 வீடுகள் வீதம் கட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீடும் 400 சதுரடி பரப்பு கொண்டது. ஹால், சமையலறை, படுக்கையறை, குளியலறை, கழிப்பறை வசதி செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அரசின் பங்களிப்பு ரூ.1.50 லட்சம், தமிழக அரசின் பங்களிப்பு ரூ.6.29 லட்சம். பயனாளிகள் தங்களது பங்களிப்பாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி, வீடு ஒதுக்கீடு பெற்றுக் கொள்ள வேண்டும். ஏற்கனவே இதே பகுதியில் வசித்தவர்களுக்கே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இப்பணி முழுமையாக முடிந்து திறப்பு விழாவுக்காக காத்திருக்கிறது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகள், இத்திட்ட பணி நிறைவடைந்து விட்டதாக அரசுக்கு அறிக்கை கொடுத்திருக்கின்றனர். இத்திட்டம், 2020ல் அ.தி.மு.க., ஆட்சியில் ரூ.9 கோடியில் 9 தளங்களாக கட்டும் வகையில் துவக்கப்பட்டது. நகர ஊரமைப்புத்துறை விதிமுறைப்படி, 3 மீட்டர் அகலத்துக்கு பக்கத்திறவிடம் ஒதுக்க வேண்டும்; 1.5 மீட்டர் அகலமே இருந்ததால், கட்டுமான பணி நிறுத்தப்பட்டது. அதன்பின், ஐந்து தளங்களாக குறைக்கப்பட்டு வேலை முடிக்கப்பட்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு பின் பயன்பாட்டுக்கு வர இருக்கிறது.