பெ.நா.பாளையம்: கோவை மாவட்டத்தில் விதி மீறல்களில் ஈடுபடும் உர விற்பனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, வேளாண்துறை அறிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் பருவமழை காலத்தில் விவசாயிகளுக்கு உரங்கள் தடையின்றி கிடைக்கும் வகையில், 11,270 மெட்ரிக் டன் உரம் கூட்டுறவு மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என, வேளாண் இணை இயக்குனர் தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் ராபி பருவ சாகுபடியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது, 1.12 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை, சோளம், மக்காசோளம், பழம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களுக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா, 1,456 மெட்ரிக் டன், டி.ஏ.பி., 2,531 மெட்ரிக் டன், 1,897, மெட்ரிக் டன் காம்ப்ளக்ஸ், 3,984 மெட்ரிக் டன் சூப்பர் பாஸ்பேட் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வட்டார அளவிலுள்ள அனைத்து உர விற்பனை நிலையங்களிலும் வேளாண் அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தர பரிசோதனைக்காக உரம் மாதிரிகளை ஆய்வகத்திற்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பிடப்பட்டுள்ள எம்.ஆர்.பி.,விலையை தாண்டி உரம் விற்பனை செய்தல், விற்பனை உரிமங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்தல் மற்றும் இணைப்பொருட்களை கட்டாயப்படுத்தி விவசாயிகளுக்கு விற்பனை செய்வது ஆகியவை கண்டறியப்பட்டால், உர கட்டுப்பாடு சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் உர விற்பனை குறித்து அனைத்து விற்பனையாளர்களுக்கும் வட்டார அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு, உரங்களை விற்பனை முனை இயந்திரம் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், விற்பனை விலைக்கு மிகாமல் விநியோகம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என, வேளாண் இணை இயக்குனர் தமிழ் செல்வி தெரிவித்தார்.