உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / யானைகளால் வீடுகள் சேதம் என்ன செய்கிறது வனத்துறை? வழித்தடம் மறித்ததே காரணம்

யானைகளால் வீடுகள் சேதம் என்ன செய்கிறது வனத்துறை? வழித்தடம் மறித்ததே காரணம்

தொண்டாமுத்தூர்;சப்பாணிமடையில், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த காட்டு யானை கூட்டம், இரண்டு வீடுகளை இடித்து சேதப்படுத்தியது. யானைகளின் வழித்தடத்தை கான்கிரீட் சுவர்கள் அமைத்து மறித்ததே, இதற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாப்பதே தங்கள் பணி என்பதை, வனத்துறையினர் உணர்வது நலம்.போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 4 காட்டு யானைகள், நேற்று அதிகாலை, சப்பாணிமடை கிராமத்தில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தன.அதிகாலை, 3:00 மணிக்கு, விநாயகர் கோவில் அருகில் உள்ள பொன்னாத்தாள் என்பவரின் வீட்டின் கதவை உடைத்து, உள்ளிருந்த சோள மாவை எடுத்து உண்டுள்ளது. அப்போது, பொன்னாத்தாள் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அதன்பின், அருகிலிருந்த சிமென்ட் ஷீட் வீட்டில், உஷா என்பவர் தனது குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். அங்கு சென்ற யானை கூட்டம், சிமென்ட் ஷீட்டை உடைத்து, வீட்டிலிருந்த அரிசியை உண்டுள்ளது. சப்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் கூச்சலிட்டதால், காட்டு யானைகள் அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளன. இதனால், வீட்டிற்குள் இருந்தவர்கள் உயிர்தப்பினர். விவசாயிகள் அளித்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.இதுகுறித்து, அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'காலம் காலமாக, பூண்டி, முள்ளாங்காடு வனப்பகுதி வழியாக வரும் காட்டு யானைகள், ஆற்றை கடந்து, ஊருக்கு வெளியே சென்று, சாடிவயல் பகுதிக்கு செல்வது வழக்கம். ஆனால், யானை வழித்தடத்தில் உள்ள தோட்டங்கள், தனியார் இடங்களில், இப்போது கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்துள்ளதால், யானைகள் வழி தவறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, சேதம் ஏற்படுத்தி வருகின்றன. யானை வழித்தடங்களை பாதுகாப்பது ஒன்றே தீர்வாகும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ