உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சத்துணவு உதவியாளர் நியமனம் எப்போது? நேர்காணல் முடிந்து 5 மாசம் ஆச்சு

சத்துணவு உதவியாளர் நியமனம் எப்போது? நேர்காணல் முடிந்து 5 மாசம் ஆச்சு

அன்னுார்; கடந்த ஏப்ரலில் நேர்காணல் முடிந்தும், இதுவரை சத்துணவு உதவியாளர்கள் நியமிக்கப்படவில்லை. அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், 75 துவக்க, 16 நடுநிலை, மூன்று உயர்நிலை, ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 93 சத்துணவு மையங்கள் செயல்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான 5,000 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும், அமைப்பாளர், சமையலர், உதவியாளர் ஆகிய மூன்று பணியிடங்கள் உள்ளன. அன்னுார் ஒன்றியத்தில் மொத்தம் 279 பணியிடங்களில் 39 அமைப்பாளர், 65 சமையலர், 26 உதவியாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் பல இடங்களில் அமைப்பாளர், சமையல் செய்ய வேண்டி உள்ளது. ஒரே சமையலர் இரண்டு மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் தினமும் சமையல் செய்து வழங்குவது பெரும் போராட்டமாக உள்ளது. இந்நிலையில் அன்னுார் ஒன்றியத்தில் 14 சமையல் உதவியாளர் பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரலில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஏப்ரல் கடைசியில் நேர்காணல் நடந்தது. நேர்காணல் முடிந்து ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை பணி நியமனம் செய்யப்படவில்லை. இதுகுறித்து சத்துணவு உதவியாளர் வேலைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் சிலர் கூறுகையில்,' பணியில் இருந்து ஓய்வு, இறப்பு ஆகிய காரணங்களால் பெரும்பாலான மையங்களில் சத்துணவு பணியாளர்கள் இல்லை. தற்போது அறிவிக்கப்பட்ட நியமனமாவது செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்த்தால் அதுவும் ஐந்து மாதங்களாக வரவில்லை. அரசு உடனடியாக நேர்காணல் முடிவுகளை வெளியிட்டு சத்துணவு உதவியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை