உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பள்ளி நிர்வாகம் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இந்த நிலை மாறுமா?சத்துணவு திட்ட செயல்பாடு சூலுார் ஒன்றியத்திடம்

பள்ளி நிர்வாகம் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இந்த நிலை மாறுமா?சத்துணவு திட்ட செயல்பாடு சூலுார் ஒன்றியத்திடம்

சூலூர்:கோவை மாநகராட்சி பகுதியில் உள்ள 6 பள்ளிகளின் நிர்வாகம் கோவை மாநகராட்சியிடமும், சத்துணவு திட்ட செயல்பாடுகள் சூலூர் ஒன்றியத்திடம் இருப்பதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.சூலூர் ஒன்றியத்தில், உள்ள பள்ளிகளில் சத்துணவு திட்டத்தை சூலூர் யூனியன் அலுவலகத்தில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒரு உதவியாளர் கண்காணிக்கிறார்கள். சூலூர் ஒன்றியத்தில், 49 துவக்கப் பள்ளிகள், 21 நடுநிலை, 11 உயர்நிலை, எட்டு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. மேலும், சிங்காநல்லுார் மற்றும் வரதராஜபுரத்தில் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் ஒரு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஐந்து மேல்நிலைப் பள்ளிகளும் கடந்த பல ஆண்டுகளாக சூலூர் ஒன்றியத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

குழப்பம்

இவற்றில் படிக்கும், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் மதிய உணவு சாப்பிடுகின்றனர். சிங்காநல்லுார் மற்றும் வரதராஜபுரத்தில் உள்ள 6 பள்ளிகளின் நிர்வாகம் மட்டும் கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், சத்துணவு திட்ட நிர்வாகம் சூலுார் ஒன்றியத்தின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த 6 பள்ளிகளின் சத்துணவு திட்ட செயல்பாடுகளை சூலுார் யூனியன் துணை வட்டரா வளர்ச்சி அலுவலர் தான் மேற்பார்வையிடுகிறார்.சூலூர் ஒன்றியத்தின் வடக்கு பகுதியில் கடைசி ஊரான பதுவம்பள்ளி, 25 கி.மீ., தொலைவிலும், கிழக்கு பகுதியில் உள்ள வடுகன் காளிபாளையம், 30 கி.மீ., தொலைவிலும் உள்ளது. அங்குள்ள பள்ளிகளின் சத்துணவு திட்ட செயல்பாடுகளை ஆய்வு செய்தல், தினசரி அறிக்கை தயாரித்தல், அரசு கேட்கும் புள்ளி விபரங்களை அளித்தல் உள்ளிட்ட பணிகளுக்கே நேரம் போதாமல் இருக்கும் போது, கூடுதலாக, மாநகராட்சி பகுதியில் உள்ள பள்ளிகளையும் கண்காணிப்பதால் சத்துணவு அலுவலர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

அலுவலர்கள் அவதி

அதேபோல், 6 மாநகராட்சி பள்ளிகளின் சத்துணவு ஊழியர்கள், சம்பளம் பெற, மீட்டிங்கில் பங்கேற்க, சூலூர் வர வேண்டி யுள்ளது. பூசாரி பாளையத்தில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் இருந்து அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை இறக்கும் ஊழியர்கள், கையெழுத்து வாங்க, ஒவ்வொரு முறையும் சூலூர் வரவேண்டி உள்ளதால் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். மாநகராட்சி பகுதிக்குள் சென்று ஆய்வு செய்யவும் சத்துணவு திட்ட அலுவலர்கள் அவதிப்படுகின்றனர். இதனால், மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஆறு பள்ளி சத்துணவு கூடங்களை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

காலை உணவு திட்டம்

தற்போது ஊரக பகுதிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. வரும் நாட்களில் மாநகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படி செயல்படுத்தும் போது, சூலூர் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். அதனால், வரும் கல்வி ஆண்டில் இருந்தாவது, மாநகராட்சி பள்ளிகளின் சத்துணவு கூடங்களை, சூலூரில் இருந்து பிரித்து, மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை