| ADDED : நவ 22, 2025 07:10 AM
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் கார் டயர் வெடித்து லாரி மீது மோதியதில், காரில் பயணம் செய்த பெண் உயிரிழந்தார். நான்கு பேர் காயமடைந்தனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மகாதேவபுரம், அங்கம்மாள் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் ராமாத்தாள், 70. இவரது மகள் கோமதி, கோமதியின் மகள் நந்தினி, நந்தினியின் குழந்தைகள் ஸ்ரீ ராகவன், 7, தர்ஷினி, 10. இவர்கள் அனைவரும் நேற்று காலை ஈரோடு மாவட்டம் ஊத்துக்குளி படியலூர் அருகே உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் அஸ்வின், 29, ஓட்டி சென்றார். குலதெய்வம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் காரில் மேட்டுப்பாளையத்திற்கு புறப்பட்டு வந்தனர். கார் மேட்டுப்பாளையம் அன்னூர் சாலையில் நடூர் காபி ஒர்க்ஸ் அருகே வந்த போது, திடீரென காரின் வலது பக்க முன் டயர் வெடித்தது. இதனால் கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய நிலையில், அந்த கார் எதிரே வந்த ஒரு லாரியின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் நிற்காமல் எதிரே நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது மீண்டும் மோதியது. அக்கம் பக்கத்தினர், அவர்களை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் வரும் வழியிலேயே நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த ராமாத்தாள், கோமதி, ஸ்ரீ ராகவன்,தர்ஷினி டிரைவர் அஸ்வின் ஆகியோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ----