| ADDED : டிச 28, 2025 05:03 AM
கோவை, பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவன வளாகத்தில் உலக அமைதியை கருப்பொருளாக கொண்டு பெண்களுக்கான கால்பந்து போட்டி இன்று நடக்கிறது. பேரூர் ஆதினம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், கேர்ஸ் பிளே குளோபல் நிறுவனர் ஜனனி ஆகியோர் கோவை பிரஸ் கிளப்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது: பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனம் மற்றும் கேர்ஸ் பிளே குளோபல் தொண்டு நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது. ஐந்தாவது ஆண்டாக உலக அமைதியை கருப்பொருளாக கொண்டு பேரூரில் உள்ள சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவன வளாகத்தில் நாளை(இன்று) இப்போட்டி நடத்தப்படுகிறது. காலை, 7:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இப்போட்டி இடம்பெறுகிறது. பள்ளி, கல்லுாரிகள், சங்கங்கள் என, 32 அணிகளை சேர்ந்த, 350க்கும் மேற்பட்ட மாணவியர், 12, 14, 16 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் பங்கேற்கின்றனர். கோவையில் கால்பந்து போட்டிகளில் பெண்கள் பங்கேற்பதற்கான சூழல் குறைவாகவே உள்ளது. எனவே, பெண்கள் கல்வி உள்ளிட்டவற்றில் வளர்ச்சி அடைவதுடன், தன்னம்பிக்கையை விதைத்து ஊக்குவிக்கும் வகையிலும் இக்கால்பந்து போட்டிகளை நடத்துகிறோம். தனிமனித அமைதிதான் உலக அமைதி என்கின்ற அடிப்படையில் உலக அமைதியை கருப்பொருளாக கொண்டு போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு கோப்பை, பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் நிரஞ்சனா, ஐ.நா., சிறப்பு துாதுவர் ராஜா ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று பரிசுகள் வழங்க உள்ளனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.